பாடாங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடந்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில் இடம்பெற்ற தேசிய கீத அங்கத்தில் மனம் உருக பாடி, கண்கலங்கிய வண்ணம் காணப்பட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
பாடகர் ஷபீர் தபாரே ஆலமின் காந்த குரலில் வழிநடந்த இந்த அங்கத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக அணிவகுப்பில் இடம்பெற்ற ஒன்றரை மணி நேர கலை அங்கத்தின் ஒர் அம்சமாக திரு ஷபீரின் ‘சிங்கை நாடு' பாடல் அங்கமும் நடந்தேறியது. 2012ஆம் ஆண்டு வெளியான இந்த பாடல் 2021ஆம் ஆண்டில் முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பில் படைக்கப்பட்டது.
பிரதமராக திரு வோங்கும் அதிபராக திரு தர்மனும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
20 ஆண்டுகாலம் சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ சியன் லூங், முதன்முறையாக மூத்த அமைச்சராக அணிவகுப்பில் கலந்துகொண்டார்.