கட்டுமானத் துறை ஊழியரான திரு சயீத் முகம்மது அபு, தனது சொந்த நாடான பங்ளாதேஷில் அடிக்கடி ரத்த தானம் செய்தவர்.
கடந்த மூன்றாண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்துவரும் சயீத் முகம்மது அபு, இப்போது இங்கும் ரத்த தானம் செய்து சமூகத்துக்குப் பங்காற்றி வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று சுகாதார அறிவியல் ஆணையத்தின் பிலட்பேங்@எச்எஸ்ஏ ரத்த வங்கியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய 27 வயதாகும் அவர், தான் வேலை செய்யும் லியென் கே கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம் ரத்த தானம் செய்துவிட்டு வர நேரமும் இருவழி டாக்சிக்கான பணத்தையும் தருவதாகத் தெரிவித்தார்.
“மக்களுக்கு உதவுவதே எனது எண்ணம்,” என்றார் சயீத் முகம்மது அபு.
அவரைப் போல் துப்புரவுப் பணியாளரான 24 வயது சாஹாத் முகம்மது, முதன்முறையாக ரத்த தானம் செய்ய அன்றைய தினம் சுகாதார அறிவியல் ஆணையத்தின் ரத்த வங்கிக்குச் சென்றார். ஆனால் அவரின் ரத்தம், தானம் செய்வதற்கு உகந்த நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சஹாத் முகம்மதுக்கும் ரத்த தானம் செய்ய நேரம் வழங்கப்பட்டது, போக்குவரத்துச் செலவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2018ஆம் ஆண்டு முதல் 2,500க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனர் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தானத் திட்டத்துக்கான குழும இயக்குநர் பிரகாஷ் மேனன் தெரிவித்தார். அந்த ஊழியர்களில் 1,800க்கும் அதிகமானோர் வெற்றிகரமாக ரத்த தானம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஊழியர்களில் பலர் தங்கள் சொந்த நாடுகளில் ரத்த தானம் செய்தவர்கள். சிங்கப்பூரிலும் உயிர்களைக் காக்க அவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய விரும்பினர்,” என்றார் திரு பிரகாஷ் மேனன்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், ஒன்றாகச் செயல்பட வெளிநாட்டு ஊழியர் நிலையத்தைத் தொடர்புகொண்டது. வெளிநாட்டு ஊழியர்கள், தாங்கள் வசிக்கும் தங்குவிடுதிகளுக்கு அருகே உள்ள ரத்த வங்கிகளுக்குக் குழுக்களாகச் செல்ல வகைசெய்யும் ஏற்பாட்டைச் செய்து வருவது இரு அமைப்புகளும் ஈடுபட்டுள்ள கூட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இந்தப் புதிய ஏற்பாட்டின்கீழ், வெளிநாட்டு ஊழியர்களை ரத்த வங்கிகளுக்குக் கொண்டு செல்ல பேருந்துச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதோடு, தகவல்களை மொழிபெயர்த்து ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஊழியர்களிடையே ஏற்படுத்தும் முயற்சியில் தொண்டூழியர்கள் ஈடுபடுகின்றனர்.