ஆஸ்திரேலியாவுக்கு சாலை வழிப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவருக்கு அந்நாட்டின் குவீன்ஸ்லாந்து மாநில அரசு ஆஸ்திரேலிய டாலர் 1,106 (S$1,000) அபராதம் விதித்துள்ளது.
திருவாட்டி ஷெல்லி லு என்ற அந்த 42 வயது மாது காரில் இருக்கைவாரை முறையாக அணிவதற்கு பதிலாக அதைத் தனது கை இடுக்கில் வைத்துக்கொண்டிருந்ததை போக்குவரத்து கேமராக்கள் பதிவு செய்திருந்தன.
திருவாட்டி ஷெல்லி தான் வாகன ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் தான்கார் இருக்கைவாரை முறையாக அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கைவாரை அணியவேயில்லை என்று முன்னர் வந்த ஊடகத் தகவல்களையும் மறுத்தார்.
“இருக்கைவார் எனது கழுத்துப் பகுதியில் படும்போது எனக்கு அரிப்பு ஏற்படுகிறது. அதனால், அதை எனது கை இடுக்கில் வைத்திருந்தேன். அது எனது தோளைச் சுற்றி இருக்க வேண்டும்,” என்று சீன நாட்டவரான அந்த மாது தெரிவித்தார்.
திருவாட்டி ஷெல்லி லு லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றில் பணிபுரிகிறார். ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பனிலிருந்து கோல்ட் கோஸ்ட் பகுதிக்கு தமது குடும்பத்துடன் கார் பயணமாக கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடையே சென்ற இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.
அப்பயணத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து திருவாட்டி ஷெல்லி லு ஆச்சரியம் தெரிவிக்கிறார்.
அதில் முதலாவதாக போக்குவரத்து விதிமீறல் $1,000 வெள்ளி அபராதத்துக்கு இட்டுச் செல்வது ஆச்சரியமளிப்பதாகக் கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது ஆச்சரியத்தைத் தரும் அம்சமாக அந்த விதியைக் குறிப்பிடுகிறார். இருக்கைவாரை அணிந்திருந்தும் அதைச் சரியாக அணியவில்லை என்று காரணம் கூறி அபராதம் விதித்திருப்பது தான் கேள்விப்படாத ஒன்று என்றும் இவர் சொல்கிறார்.
மேலும், போக்குவரத்து கேமரா தான் கார் இருக்கைவாரைச் சரியாக அணியவில்லை என்பதைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் இவர் கூறுகிறார்.

