ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மூடப்பட்டிருந்த எல்லா கடற்கரைப் பகுதிகளும் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த எண்ணெய்க் கசிவுச் சம்பவத்துக்குப் பிறகு சிங்கப்பூரின் பல கடற்கரைப் பகுதிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டன. அச்சம்பவம், கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் எதிர்கொண்ட ஆக மோசமான எண்ணெய்க் கசிவுச் சம்பவமாகும்.
பின்னர் எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது கடற்கரைப் பகுதிகள் கட்டங்கட்டமாகத் திறந்துவிடப்பட்டன.
இப்போது சுத்திகரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் அனைத்து கடற்கரைப் பகுதிகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 11) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. நீருடன் நேரடித் தொடர்பு அதிகம் தேவைப்படாத நீர் விளையாட்டுகளில் மக்கள் ஈடுபடலாம் என்று கழகம் குறிப்பிட்டது. படகோட்டம் போன்ற நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.
எனினும், மக்கள் இன்னும் சில காலம் கடற்கரைக்கு அருகே நீந்த முடியாது.
நீருடன் நேரடித் தொடர்பு அதிகம் தேவைப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்குமாறு தேசிய பூங்காக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. எப்போது மீண்டும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து கழகம் தகவல் வெளியிடவில்லை.