சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை புவன விஸ்தா வட்டாரத்தில் வெட்டுக்கத்தியுடன் இருந்த ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அந்த 37 வயது ஆடவர் கத்தி வைத்திருந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்குப் பயன்படக்கூடிய ஆயுதத்தைப் பொது இடத்தில் வைத்திருந்ததற்காக ஆடவர் கைதுசெய்யப்பட்டார் என்றும் அவர் வைத்திருந்த கத்தியைத் தாங்கள் பறிமுதல் செய்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. சம்பவத்தில் யாரும் காயமுற்றதாகத் தகவல் இல்லை.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
புவன விஸ்தா பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகே குடியிருப்பு வட்டாரங்களுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கொண்டாட்டம், தேசிய தின அணிவகுப்பு நிர்வாகக் குழுவும் மக்கள் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த அத்தகைய ஐந்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

