இலகு ரயில் ஏறி மாண்ட மாது: சம்பவம் ஒரு விபத்து எனத் தீர்ப்பு

இலகு ரயில் ஏறி மாண்ட மாது: சம்பவம் ஒரு விபத்து எனத் தீர்ப்பு

2 mins read
31d66c50-2ada-4a0a-b3e5-3a4b93670da6
கோவ் இலகு ரயில் நிலையத்தில் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சம்பவம் நிகழ்ந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொங்கோல் இலகு ரயில் (எல்ஆர்டி) பாதையில் உள்ள பொங்கோல் ஈஸ்ட் எல்ஆர்டி லூப் பாதையில் அமைந்துள்ள கோவ் நிலையத்தில் தானியக்க இலகு ரயில் மாது ஒருவர் மீது ஏறி அவர் உயிரிழந்தார்.

அச்சம்பவம், அந்த மாது தவறுதலாக தண்டவாளத்தில் விழுந்ததால் நிகழ்ந்த விபத்து என்று ஒரு நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று மூத்த கணக்கியல் அதிகாரியாகப் பணியாற்றிய 33 வயது வோங் சூன் ஹெங் எனும் மாது, சக ஊழியர்களுடன் இரவு உணவருந்திய பிறகு வீடு திரும்ப ரயிலில் ஏறினார். ஆனால் பின்னர் அவர் கோவ் நிலையத்தில் உள்ள கண்ணாடித் தடுப்புகளுக்கு இடையே உள்ள பகுதியை நோக்கி நடந்து சென்றது காணப்பட்டது.

படிப்படியாக வேகமாகச் சென்ற அவர் பிறகு தடுப்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஓடியதும் பின்னர் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளிகளில் தெரிந்தது.

மரண விசாரணை அதிகாரியான ஏடம் நக்கோடாவின் கண்டுபிடிப்புகளில், “கிடைத்திருக்கும் ஆதாரத்தை வைத்துப் பார்த்ததில் திருவாட்டி வோங் எதனால் இடைவெளியை (கண்ணாடித் தடுப்புகளுக்கு இடையிலான பகுதி) நோக்கி நடந்து பிறகு ஓடினார் என்பதை அறிய முடியவில்லை.

“அதேவேளை, யாரும் அவரைத் தள்ளிவிடவோ அவ்வாறு விழச் செய்யவோ இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கண்டுபிடிப்புகளில் ஆகஸ்ட் எட்டு என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த திருவாட்டி வோங், தண்டவாளத்தில் விழாமல் பார்த்துக்கொள்ள மற்ற பயணிகளுக்குப் போதுமான நேரம் இல்லை என்றும் அதனைத் தொடர்ந்து தானியக்க இலகு ரயில் அவர் மீது ஏறியது என்றும் திரு ஏடம் நக்கோடா குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான திருவாட்டி வோங்குக்கு ஒரு வயது மகன் இருக்கிறார். சம்பவத்தில் அவரின் வயிற்றுப் பகுதியில் மோசமான காயங்கள் ஏற்பட்டன. வயிற்றுப் பகுதியில் உள்ள அவரின் சில உடல் உறுப்புகளும் வெளியே தெரிய நேரிட்டது.

அன்றைய தினமே இரவு 10.15 மணிக்கு கோவ் ரயில் நிலையத்தில் திருவாட்டி வோங் உயிரிழந்தார் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்