சிங்கப்பூரின் 59வது தேசிய தினத்திற்காக சன்லவ் முதியோர் பராமரிப்பு இல்லத்தின் நிர்வாகத்திலுள்ள சை சீ துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் முதியவர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) கிட்டத்தட்ட 200 முதியோரும் வட்டாரவாசிகளும் வருகையளித்த அந்நிகழ்ச்சியை தென்கிழக்கு வட்டார மேயர் ஃபாஹ்மி அலிமானும் மரீன் பரேட் குழுத்தொகுதிக்கான இரண்டாம் ஆலோசகர் டாக்டர் சுவா பெய் லிங்கும் சிறப்பித்தனர்.
தேசிய நிறங்களான சிவப்பு, வெள்ளையில் ஆடைகள் அணிந்த முதியோரும் தொண்டூழியர்களும் ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் என நான்கு மொழிகளில் பாடினர். புதிர் போட்டி, பேசாமல் பாவனைகள் மட்டும் செய்யும் ‘சந்திரா கேம்’ ஆகியவற்றுடன் பங்கேற்பாளர்கள் மேலும் பல கேளிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட ஃபுப்பே உணவு, செண்டோல் பானங்களை முதியோர் மகிழ்ச்சியுடன் ருசித்தனர். ஏறத்தாழ 20 தொண்டூழியர்கள், முதியோர் அனைவரையும் கவனித்து நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற்றதை உறுதிசெய்தனர்.
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) ரத்ததான நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சுமார் 177 பேர் பங்கேற்றனர். துடிப்பான மூப்படைதலை ஊக்குவிக்கும் இந்நிலையத்தில் யோகாசனம், சக்கர நாற்காலி பந்து விளையாட்டு, சமையல் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளை இந்நிலையம் நடத்தவுள்ளது.
இதுபோல் மொத்தம் ஏழு துடிப்புமிக்க மூப்படைதல் நிலையங்களை சன்லவ் இல்லம் நிர்வகித்து நடத்தி வருகிறது.
முதியோருடன் பிணைப்புகளை வலுப்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று அந்நிலையத்தின் நிர்வாகி நூர் அட்டிகா, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“நம் சமூகத்திலுள்ள அனைத்து வயதினரும் இவ்வாறு எங்களுடன் ஒன்றிணைந்து தேசிய தினத்தைக் கொண்டாடுவது எங்களுக்கு மனநிறைவு அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

