அமெரிக்க டாலருடனான சிங்கப்பூர் வெள்ளியின் பரிவர்த்தனை விகிதம் இவ்வாண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அமெரிக்க டாலருடனான சிங்கப்பூர் நாணயத்தின் பரிவர்த்தனை விகிததத்தை இறுக்கமாக வைத்துள்ளதால் உள்ளூர் நாணயத்தின் மதிப்பு இவ்வாண்டு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
சிங்கப்பூர் நாணயம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஏறத் தொடங்கியது. அது தற்பொழுது ஆசியாவில், மலேசிய ரிங்கிட், ஹாங்காங் டாலருக்கு அடுத்தபடியாக, மூன்றாவது வலுவான நாணயமாக விளங்குகிறது.
சிங்கப்பூர் நாணயம் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று 0.1% ஏற்றம் கண்டு ஓர் அமெரிக்க டாலருடனான பரிவர்த்தனையில் 1.3163 என உயர்வு கண்டது. இது டிசம்பர் 28ஆம் தேதிக்கு பின்னர் ஆக உயர்வான பரிவர்த்தனை விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்த பரிவர்த்தனை விகிதமான 1.3655 என்ற விகிதத்திலிருந்து 3.6% தற்பொழுது உயர்ந்துள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளில் மற்ற ஆசிய நாணயங்களைவிட சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு உயர்வாகவே இருந்தது. ஆனால், இந்த நிலை 2024ஆம் ஆண்டில் மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.