தீங்குநிரல்கள் மூலம் ஏற்படும் மோசடிகளால் சிங்கப்பூரில் உள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயனாளர்கள் தொடர்ந்து பாதிப்படைகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தீங்கு விளைவிக்கக்கூடிய செயலிகளை ஏறத்தாழ 900,000 முறை அவர்கள் பதிவிறக்கம் செய்ய முயன்றதாக ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று கூகல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அந்தச் செயலிகளை அவர்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் அவர்களது கைப்பேசி, கணினி போன்ற சாதனங்கள் ஊடுருவப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள 200,000க்கும் அதிகமான ஆண்ட்ராய்டு சாதனங்களில் இத்தகைய தீங்கு விளைவிக்கக்கூடிய செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட இருந்தன.
ஆனால், அவற்றை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் கூகலின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை தடுத்தது.
சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட கூகல் பிளே பாதுகாப்பு அம்சம் சந்தேகத்துக்குரிய, அதிகாரபூர்வமற்ற செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவதைத் தடுக்கிறது.
இந்நிலையில், தீங்குநிரல்களால் இணைய ஊடுருவல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் தீங்குநிரல்கள் மோசடிகளின் எண்ணிக்கை 1,899ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 95ஆகச் சரிந்தது.
கூகல் சிங்கப்பூரின் லேப்ரடோர் பூங்கா அலுவலகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சேஃபர் வித் கூகல்’ நிகழ்வில் இந்தப் புள்ளிவிவரங்களைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் வெளியிட்டார்.
மோசடிகளை எதிர்கொள்ள, தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும்படி அவர் நிறுவனங்களிடம் வலியுறுத்தினார்.
கூகல் மற்றும் சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு இணைந்து கூகல் பிளேக்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை சிங்கப்பூரில் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தின.
ஆண்ட்ராய்டு பயனாளர்களை ஏமாற்றி சில செயலிகளை மோசடிக்காரர்கள் பதிவிறக்கம் செய்யவைத்துள்ளனர்.
அந்தச் செயலிகள் மூலம் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தங்கள் சாதனங்களைப் பயன்படுத்தி செய்யும் அனைத்தையும் மோசடிக்காரர்களால் திரைமறைவிலிருந்து கண்காணிக்க முடியும். அதுமட்டுமல்லாது அவர்களது வங்கி விவரங்களையும் பெற முடியும்.
இத்தகைய பிரச்சினையின் காரணமாக 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பலர் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டோர் $34 மில்லியனுக்கு அதிகமான தொகையை இழந்தனர்.
தீங்குநிரல்களை எதிர்கொள்ளும் முயற்சில் யுஓபி, ஓசிபிசி, டிபிஎஸ் வங்கிகள் உட்பட மற்ற அமைப்புகளும் இறங்கின.
தங்கள் வங்கியின் செயலி இருக்கும் அதே சாதனங்களில் சந்தேகத்துக்குரிய செயலிகளும் இருந்தால் வங்கி செயலியை உடனடியாக முடக்க உள்ளூர் வங்கிகள் ஏற்பாடு செய்தன.
அதிகாரபூர்வமற்ற செயலிகள் அதன் சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்படுவதைத் தடுக்க சாம்சுங் நிறுவனமும் நடவடிக்கை எடுத்தது.

