2027க்குள் குடும்பங்களுக்கு நட்பார்ந்த முறையில் 7 பேருந்துச் சந்திப்பு நிலையங்கள்

2 mins read
05a1c33d-6952-4c0c-8c80-5c2891b12823
ஓவியரின் கை வண்ணத்தில் புதிய, மேம்படுத்தப்பட்ட அங் மோ கியோ பேருந்து நிலையம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

கைக்குழந்தைகளைப் பராமரிக்கத் தேவைப்படும் அறைகள் போன்றவற்றுடன் குடும்பங்களுக்கு நட்பார்ந்த முறையில் இயங்கும் 7 பேருந்துச் சந்திப்பு நிலையங்கள் 2027ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும்.

இதற்காக அங் மோ கியோ, பிடோக், பூன் லே, கிளமெண்டி, செங்காங், சிராங்கூன், தோ பாயோ ஆகிய பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும்.

இந்தப் பேருந்துச் சந்திப்பு நிலையங்களின் பயன்பாட்டை மேம்படுத்தும் விதமாக, அங்கு பயணிகளுக்கு நட்பார்ந்த முறையிலான அம்சங்களுடன் ஊழியர்களுக்கான வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) அன்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இந்த ஏழு பேருந்துச் சந்திப்பு நிலையங்களிலும் மேம்பாட்டுப் பணிகள் முடிவுற்றபின், அவற்றில் முதியோருக்கான சிறப்பு வரிசைத் தடங்கள், அதிக இருக்கைகள், பயணியர் பராமரிப்பு அறைகள் இருக்கும். இவற்றுடன், குழந்தை பராமரிப்புக்குத் தேவைப்படும் குடும்ப அறைகளும் இருக்கும் என ஆணையம் கூறுகிறது.

சக்கரநாற்காலியுடன் வருவோர் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள், குறிகளுடன் கூடிய சிறப்பு வரிசைத் தடங்கள், கண்பார்வை குறைவானோர்களுக்கு வசதியாக ‘பிரெய்ல்’ சின்னங்களைக்கொண்ட கைப்பிடிகள் ஆகியவையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் ஓய்வுக் கூடங்கள், பயணியர் சேவை அலுவலகங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்படும். இங்கு உள்ள விளக்குகள், குளிரூட்டிகள் அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மேம்பாடுகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜூரோங், டவுன் ஹால், தெங்கா பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் உள்ள வசதிகளைப்போல் இருக்கும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும்போது பேருந்துச் சேவை பாதிக்கப்படாது என்று ஆணையம் கூறியது. பயணிகளுக்குப் பாதிப்பை குறைக்கும் வகையில், பேருந்தில் ஏற, இறங்க பயன்படுத்தப்படும் தடங்கள் ஒவ்வொன்றாக மேம்படுத்தப்படும் என்றும் இதில் இரைச்சல், தூசு போன்றவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் விளக்கியது.

“பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவை வழங்குவோருடன் இணைந்து ஆணையம் வழிகாட்டி சைகைகளை அமைக்கும்,” என்றும் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்