ஹாங்காங்கில் செயல்படும் அனைத்துலக சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் கும்பலுடன் தொடர்புடைய எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 23 வயதுடைய சிங்கப்பூரர் ஒருவரும் அடக்கம்.
இது பற்றிய வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) அன்று வெளியிட்ட தனது அறிக்கையில் சிங்கப்பூர் காவல் துறை, ஹாங்காங் காவல் துறை, அனைத்துலக காவல் துறை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அந்தக் கும்பலின் நடவடிக்கைகளை முறியடித்ததாக தெரிவித்தது.
அந்தக் கும்பல், சிங்கப்பூரில் தொழில்நுட்ப ஆதரவு தொடர்பான மோசடிகளிலும் ஹாங்காங்கில் மற்ற மோசடிகளிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கிடைத்த கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதிலும் அந்தக் கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஜூலை வரை சிங்கப்பூர் காவல் துறை தொழில்நுட்ப ஆதரவு அளிப்பதாகக் கூறி 185 மோசடிகள் நடந்தது தொடர்பான புகார்கள் தனக்குக் கிடைத்ததாக தெரிவித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது $17.9 மில்லியனை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற மோசடிகளில் ஒருவருடைய மடிக்கணினியிலோ அல்லது கணினியிலோ தீங்குநிரல் ஊடுருவியுள்ளதாக மோசடிக்காரர்கள் கூறுவர். பின்னர், பாதிக்கப்பட்டவர்களிடம் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் தொழில்நுட்ப ஆதரவு வழங்கும் ஊழியர்கள்போல் நடித்து உதவ முன்வருவர்.
இதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து மோசடிக்காரர்களைப் பிடிக்க உதவும் போர்வையில் அவர்கள் தங்கள் இணைய வங்கிக் கணக்குகளுக்குச் செல்லுமாறு செய்யப்படுவர். இது மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற உதவும். வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றபின் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சூறையாடுவர்.
சில சந்தர்ப்பங்களில் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை மின் நாணயக் கணக்குகளை ஏற்படுத்த உதவி புரிவர்.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக்காரர்கள் தொழில்நுட்ப ஆதரவு வழங்கும் போர்வையில் மோசடியாகப் பெறும் பணம் ஹாங்காங் வழியாக சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்யப்படுவதாக வர்த்தக விவகாரப் பிரிவு இயக்குநர் டேவிட் சியூ கூறுகிறார்.
இந்த மோசடிக்காரர்களைப் பிடிக்க வர்த்தக விவகாரப் பிரிவும் ஹாங்காங் காவல் துறையும் இணைந்து நடவடிக்கையில் இறங்கின.