சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநாட்டுப் பயணிகள் அதிகரித்துள்ளதால் மாணவர்களில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை குறித்து ஆகஸ்ட் 21ஆம் தேதி நிர்வாகத்துடன் விவாதிக்க தேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கம் தனது மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சுற்றுப் பயணிகள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருவது அதிகரித்ததால் பல்கலைக்கழக உணவு விடுதிகள், பல்கலைக்கழக வளாகத்துக்குள் சேவையில் இருக்கும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஆகியவற்றுடன் மற்ற பிரச்சினைகளும் தலைதூக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் வருகையாளர் எண்ணிக்கையை சரிசெய்வதற்காக சுற்றுப்பயணி வருகை நிலையத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றின் மூலம் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பல்கலைக்கழக மாணவர் கல்விக்கான இணை அதிகாரி டேவிட் சியூ சுற்றுப் பயணி வருகை அதிகரித்திருப்பதை ஒப்புக்கொண்டார். அதற்குக் காரணம் ஆசிய நாடுகளில் கோடை காலப் பயணங்கள் மேற்கொள்ளும் பருவம் என்று அவர் விளக்கியுள்ளார்.
அத்துடன், சுற்றுப்பயணி வருகை பல்கலைக்கழக கல்வி, மாணவர் நடவடிக்கைகளை பாதிக்காத வண்ணம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.
இதில் இரண்டு மாத அறிமுகத் திட்டமாக 40 பட்டயக் கல்வி மாணவர்கள் தூதர்களாக சுற்றுப் பயணிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநெறிகள் பற்றி கற்றுக்கொடுப்பர். அத்துடன், அவர்கள் பல்கலைக்கழகத்தை சுற்றிக் காட்டும் வழிகாட்டிகளாகவும் செயல்படுவர்.
எனினும், இது குறித்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் தேதி) அன்று அறிக்கை மூலம் கருத்துத் தெரிவித்த தேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று கூறியது.

