செம்பவாங்கில் தனிநபர் நடமாட்டச் சாதனத்துக்குத் தீ வைத்தவர் மீது தீயைக் கொண்டு தொல்லை தரும் செயலில் ஈடுபட்டதாக சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அந்த 41 வயது ஆடவரின் செயலால் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த மற்ற பொருள்களும் சேதமடைந்தன.
அட்மிரல்டி லிங்க் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 482ன் கீழ்த்தளத்தில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்துக்கு சுவா டெக் ஷெங் எனும் ஆடவர் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 15) தீ வைத்தார். அதனால் அப்பகுதியில் இருந்த மற்ற பொருள்களும் சேதமடைய நேரிட்டது.
தீ குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எட்டு சைக்கிள்களும் மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் தீயில் கருகிப்போயின.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் வசிப்போரில் 35 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவக்கப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலமும் காவல்துறை கேமராக்கள் வாயிலாகவும் உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சுவாவை அடையாளம் கண்டனர். வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 16) அவர் கைதுசெய்யப்பட்டதாக சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றில் மூலம் காவல்துறை குறிப்பிட்டது
சுவா தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் வழக்கு இம்மாதம் 23ஆம் தேதியன்று நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.