தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிறரின் சிங்பாஸ் கணக்குகளைக் கொண்டு $2 மி. கடன் பெற்றதாக நம்பப்படும் ஆடவர்

1 mins read
bcaf03af-0071-49ac-b8c6-3aee0e72f657
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், 10 மாத காலத்தில் மற்றவர்களின் சிங்பாஸ் கணக்குகளைக் கொண்டு உள்ளூர் வங்கிகளை ஏமாற்றி இரண்டு மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான கடனைப் பெற விண்ணப்பித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பிறரை ஏமாற்றி, 36 வயது கோ வூன் டிக், அவர்களின் சிங்பாஸ் விவரங்களைப் பெற்றதாக நம்பப்படுகிறது. கடன் அட்டைகளை விற்கும் வங்கி அதிகாரி, வாடிக்கையாளர்களின் சார்பில் கடனுக்கு விண்ணப்பிக்கும் கார் விற்பனையாளர் போன்றவர்களைப் போல் நடித்து அவர் இந்த ஏமாற்றுச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் ஏமாற்றியதாக கோ மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடன் விண்ணப்ப ஆவணங்களில் தவறுகள் காணப்பட்டதை உள்ளூர் வங்கிகள் தங்களிடம் தெரிவித்ததாக காவல்துறை கூறியது. 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இம்மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அதுகுறித்து புகார்கள் வந்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அதோடு, அனுமதியின்றி தங்களின் பெயர்களைப் பயன்படுத்தி உள்ளூர் வங்கிகளிடமிருந்து கடன் பெறப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்களும் காவல்துறையிடம் புகார் தந்தனர். கடன் தர சம்பந்தப்பட்ட வங்கிகளில் அனுமதி வழங்கப்பட்டவுடன் தொகை, கோவின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் விண்ணப்ப ஆவணங்களில் தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டதற்கு முன்பு பணம் அவரின் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்