தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருடாந்திர குடியுரிமை விழா: 177 பேருக்குச் சிங்கப்பூர் குடியுரிமை

2 mins read
8183281b-73ee-4b59-ac3c-b53aca819ca2
சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 49 வயது திரு சுதன் வின்செண்ட்டுடன் அவரது மனைவி திருமதி ஸ்மைலின் புஷ்பலதா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வருடாந்திர குடியுரிமை விழாவில் 177 புதிய சிங்கப்பூரர்கள் தங்கள் குடியுரிமைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

மக்கள் கழகம் நடத்திய இவ்விழா, சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தின் கலையரங்கில் நடைபெற்றது.

புதிய சிங்கப்பூரர்கள் தங்கள் குடியுரிமைச் சான்றிதழ்களை தேசிய குடியுரிமை விழா அல்லது நாடாளுமன்றக் குழுத் தொகுதி அளவில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேசிய குடியுரிமை விழாவை ஒவ்வொரு தொகுதியும் மாறி மாறி நடத்தும்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை விழாவில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புதிய சிங்கப்பூரர்களை வரவேற்றார்.

சிங்கப்பூரின் பல்லினம், நல்லிணக்கம் போன்ற அம்சங்களுக்குப் பங்களிக்க புதிய சிங்கப்பூரர்களை அவர் ஊக்குவித்தார்.

“ஒவ்வொருவருக்கும் தனித்துவம்வாய்ந்த திறமைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நமது சமூகத்துக்குப் பங்களிக்க வழிவகைகளை ஆராய வேண்டும்,” என்றார் அமைச்சர் விவியன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திரவியல் பொறியாளரான 49 வயது சுதன் வின்செண்ட்டுக்குச் சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

திரு சுதனுக்கு 2008ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது.

சிறிது காலம் வேலை செய்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் சிங்கப்பூரின் ஒழுங்குமுறை, தரமான போக்குவரத்துச் சேவை ஆகியவை அவரைப் பிரமிக்க வைத்தன.

இதன் காரணமாக சிங்கப்பூர் நிரந்தரவாசியாவதற்கு விண்ணப்பம் செய்ய 2010ஆம் ஆண்டில் அவர் முடிவெடுத்தார்.

இந்நிலையில், அவரது பிள்ளைகளுக்குச் சிங்கப்பூர் வாழ்க்கை பழகிவிட்டது.

அவர்கள் சிங்கப்பூரில் கல்வி பயின்றனர்.

திரு சுதனின் 19 வயது மகன் தற்போது தேசிய சேவையாற்றுகிறார்.

திரு சுதனின் மனைவி திருமதி ஸ்மைலின் புஷ்பலதா, அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆகியோர் சிங்கப்பூரர்கள்.

“சிங்கப்பூர் குடியுரிமை கிடைத்திருப்பதன் மூலம் சிங்கப்பூரில், குடும்பமாக வாழ்ந்து எங்கள் கனவை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலட்சியத்தை எட்ட இது எனது பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று திரு சுதன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்