தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மீத்திற ஆற்றலுடைய மாணவர்களுக்காக மீத்திறன் கல்வித் திட்டம் 1984ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கல்வித் திட்டம் தொடக்கப்பள்ளி மாணவர்களில் மீத்திற ஆற்றலுடைய ஒரு விழுக்காடு மாணவர்களுக்கானது.
இந்நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.
கூடுதல் மாணவர்களுக்குப் பலன் தரும் வகையில் இந்தத் திட்டம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீத்திற ஆற்றலுடைய மாணவர்களை அடையாளம் காணவும் அவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை நடத்தவும் தேவையான ஆற்றல்களை அனைத்துத் தொடக்கப்பள்ளிகளும் கொண்டிருக்கும் என்று தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்தியக் கல்லூரி வளாகத்தில் பிரதமர் வோங் உரையாற்றினார்.
இதுவே அவரது முதல் தேசிய தினப் பேரணி உரை.
“மீத்திறன் கல்வித் திட்டத்தின் தற்போதைய வடிவம் மாற்றியமைக்கப்படும். அதற்குப் பதிலாகப் புதிய அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படும். அனைத்துத் தொடக்கப்பள்ளிகளிலும் உள்ள மீத்திற ஆற்றுலுடைய மாணவர்களின் திறன்களை முழுமையாக வெளியே கொண்டுவர இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்று பிரதமர் வோங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தொடக்கநிலை 4லிருந்து மீத்திறன் கல்வித் திட்டத்தின்கீழ் கல்வி பயில்கின்றனர்.
மற்ற மாணவர்கள் பயிலும் பாடத்திட்டத்தை இவர்களும் பயில்கின்றனர். ஆனால் மீத்திறன் கல்வித் திட்ட மாணவர்களுக்கு அந்தப் பாடத்திட்டத்தை ஒட்டி இன்னும் ஆழமாகக் கற்பிக்கப்படுகிறது.
இம்மாணவர்களுக்குத் தன்னிச்சையாக செயல்படும் திறன்கள் கற்றுத்தரப்படுகின்றன.
தங்களுக்குப் பிடித்தமான அம்சங்களை மேலும் ஆராய அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தற்போதைய அணுகுமுறையின்கீழ், நாடெங்கும் உள்ள தொடக்கப்பள்ளிகளிலிருந்து தொடக்கநிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த மையப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் ஒன்பது தொடக்கப்பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.
அவற்றில் ஆங்கிலோ சீனத் தொடக்கப்பள்ளியும் ராஃபிள்ஸ் தொடக்கப்பள்ளியும் அடங்கும்.
40 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் ரொசைத் தொடக்கப்பள்ளி, ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் தொடங்கியது.
தொடக்கநிலை 4ஆம் வகுப்பு மாணவர்களை அவை சேர்த்துக்கொண்டன.
இத்திட்டத்தின்கீழ் சேரும் உயர்நிலை 1ஆம் வகுப்பு மாணவர்களை ராஃபிள்ஸ் கல்விக் கழகம், ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி சேர்த்துக்கொண்டன.
இது பிறகு ஒன்பது தொடக்கப்பள்ளிகளாகவும் ஏழு உயர்நிலைப்பள்ளிகளாகவும் விரிவடைந்தன.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்கீழ் சேர்ந்து பயில தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தங்கள் தொடக்கப்பள்ளிகளில் இருந்தவாறு கல்வி பயில்வர்.
அங்கு அவர்கள் தொடர்ந்து தங்கள் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் பழகலாம் என்றும் அவர்களுக்கு இடையே ஏற்கெனவே பிணைப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
மாணவர்களின் பலம், ஆர்வம் ஆகியவை அடையாளம் காணப்படும் என்றும் மாணவர்களுக்கு இருக்கும் இத்திறமைகளை மேலும் மேம்படுத்தும் திட்டங்கள் ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பள்ளி அடிப்படையிலான கல்வித் திட்டங்களையும் கடந்து, குறிப்பிட்ட சில பாடங்களில் இந்த மாணவர்களில் இன்னும் அதிகளவில் மேம்பட்டுப் பலனடையலாம்.
பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள பள்ளிகளில் செறிவூட்டல் நடவடிக்கைகளில் இந்த மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கலாம் என்று பிரதமர் வோங் கூறினார்.
“ஒவ்வொரு மாணவரும் தனித்துவம் வாய்ந்தவர். வெவ்வேறு திறன்களுடன் அவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்கள் அனைவரையும் பார்த்துக்கொள்கிறோம். ஆரம்பகாலத்திலேயே சிறப்பாகச் செயல்படும் மாணவர்கள், மீத்திற ஆற்றலுடைய மாணவர்கள் மட்டுமன்றி என்னைப் போல குடியிருப்புப் பேட்டைகளில் வளர்ந்து, பிசிஎஃப் பாலர் பள்ளிகளிலும் அக்கம்பக்க பள்ளிகளிலும் கல்வி பயிலும் மாணவர்களையும் கவனித்துக்கொள்கிறோம்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
மாணவர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கல்வி கற்கவும் மேம்படவும் வளர்ச்சி அடையவும், தங்களது முழு ஆற்றலை உணரவும் ஒவ்வொரு மாணவருக்கும் உதவ அரசாங்கம் முயற்சி செய்யும் என்றார் அவர்.