தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பகுதிநேர பயிற்சிகளுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணியிடைக்கால பயிற்சி செலவுத்தொகையைப் பயன்படுத்தலாம்

2 mins read
974d1890-f590-45ed-b711-fcc04bc751f2
இதுகுறித்து தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறி - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பகுதிநேர பயிற்சிகளை மேற்கொள்வோர் அவற்றுக்கென ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணி யிடைக் கால செலவுத் தொகையில் ஒரு பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமது தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் அவரது வாழ்நாளில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணி யிடைக் கால செலவுத் தொகையாக மாதந்தோறும் 3,000 வெள்ளி வரை வழங்கப்படக் கூடும் என்று இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கும் அந்த செலவுத்தொகைத் திட்டம், முதலில் முழுநேரப் பயிற்சிகளை மேற்கொள்வோருக்கானது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வேலைக்குப் போகாமல் இருப்பதால் ஏற்படும் சம்பள இழப்பை ஈடுகட்டுவது அதன் நோக்கமாகும்.

தொ‌ழில்துறையில் முன்னேறுவதற்குத் தேவையான புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள ஊழியர்கள் தங்களின் வசதிக்கேற்ப பயிற்சிகளை மேற்கொள்வதற்கு புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணியிடைக்கால செலவுத்தொகைத் திட்டம் வகைசெய்வதாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 18) நடந்த தமது தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

எனினும், பகுதிநேரப் பயிற்சிகளை மேற்கொள்வோரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று அவர் எடுத்துச் சொன்னார். தொடர்ந்து சம்பளம் பெறுவோருக்கும் இது பொருந்தும் என்று அவர் சுட்டினார்.

சம்பந்தப்பட்டோர் வேலைக்குப் பிறகு பயிற்சிகளுக்குச் செல்லவேண்டும் என்பது ஒரு சவால்.

“பயிற்சிகளின் தொடர்பில் செலவு இருக்கும். உதாரணமாக பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும், புத்தகங்களுக்கு செலவிடவேண்டும்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணியிடைக்கால செலவுத்தொகைத் திட்டத்தை விரிவுபடுத்துவதன் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தகவல்கள் முடிவானதும் அவை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தன்மை மிகுந்த சூழலில் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து நன்கு செயல்பட அவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் மேலும் உதவிக்கரம் நீட்டுவதன் அவசியத்தையும் திரு வோங் விவரித்தார். சிங்கப்பூரிடம் மிகச் சிறந்த ஊழியரணி இருந்தாலும் தொழில்துறைகளிலும் வேலையிடங்களிலும் மாற்றங்கள் இடம்பெறும் வேகம் அதிகரிக்கும். அதனால் சில வேலைகள் இல்லாமல் போகும், அதேவேளை கூடுதல் சம்பளத்துடன் தரமான வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

“இந்தச் சூழலுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள, நாம் அனைவரும் வாழ்நாள் கற்றலைப் பின்பற்றவேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்