போக்குவரத்து, தளவாடத் துறை வேலையிடங்களில் காயமடைந்தோர் குறைவு

2 mins read
aacc9481-e987-4ea7-a1c7-74679f0a60e3
மேம்படுத்தப்பட்ட பேருந்து தொலைத்தொடர்பு அம்சங்களை போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் (இருக்கையில்) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) சோதித்துப் பார்த்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் வேலையிடத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தது.

2022ஆம் ஆண்டு 100,000 ஊழியர்களுக்கு 1,204 பேர் காயமடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,097 பேராகக் குறைந்தது.

எஸ்எம்ஆர்டி குத்தகையாளர் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியபோது போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் இந்தப் புள்ளிவிரங்களை வெளியிட்டார்.

அந்தக் கருத்தரங்கு ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்றது.

போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியின் வேலையிடங்களில் 2020ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சராசரியாக 100,000 ஊழியர்களுக்கு 648 பேர் காயமடைகின்றனர்.

இது, போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் காயமடைவோரின் தேசிய சராசரி விகிதத்தைக் காட்டிலும் குறைவு.

சிங்கப்பூரின் வேலையிட மரண விகிதத்தைப் பொறுத்தவரை, 2023ஆம் ஆண்டு 100,000 ஊழியர்களுக்கு 0.99 என்று பதிவானது. 2022ஆம் ஆண்டில் பதிவான 1.3 என்னும் விகிதத்தைக் காட்டிலும் இது குறைவு.

கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான இடையூறுகள் நிகழ்ந்த 2020ஆம் ஆண்டை தவிர்த்துப் பார்க்கையில், வேலையிட மரண விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 1க்குக் கீழ் கடந்த ஆண்டு முதல்முறை இறங்கியது.

இந்நிலையில், வேலையிடப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த திரு சீ மூன்று பரிந்துரைகளை வெளியிட்டார்.

முதலாவது, தனிப்பட்ட நிறுவன அளவில் என்றில்லாமல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வகையில் பாதுகாப்பின் தரத்தை நிர்ணயம் செய்தல்; அதற்கான திறன்களை வளர்த்தல்.

இரண்டாவது, வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

இறுதியாக, வர்த்தகத்துக்கு அவசியமான சிறந்த வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளை அங்கீகரித்தல்.

“நமது மக்களை, நமது ஊழியர்களை நல்லமுறையில் கவனித்துக்கொள்கிறோம் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

“அப்போதுதான் வேலை முடிந்த பின்னர் ஒவ்வொருவரும் தங்களது அன்புக்குரியவர்களை மீண்டும் காண பாதுகாப்பாக வீடு திரும்ப இயலும்,” என்று திரு சீ தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்