தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் ஊழியர் தங்குவிடுதியில் சட்ட விரோத சமய போதனை; அதிகாரிகள் விசாரணை

3 mins read
6a7b09db-d5c2-4012-901d-ed80c981df14
காவல்துறையின் உரிய அனுமதியின்றி சிங்கப்பூரில் போதனை செய்த பங்ளாதேஷைச் சேர்ந்த அமீர் ஹம்சா குறித்து உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயங்கரவாதத் தொடர்புகளின் பேரில் சொந்த நாட்டில் கைதுசெய்யப்பட்ட பங்ளாதேஷியர் ஒருவர் ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்து, அனுமதியின்றி வெளிநாட்டு ஊழியர்களிடம் சமய போதனை செய்திருக்கிறார்.

பங்ளாதேஷியர் அமீர் ஹம்சா, சிங்கப்பூரிலுள்ள பங்ளாதேஷைச் சேர்ந்த ஊழியர்களிடம் சட்டவிரோதமாக சமயப் பரப்புரை செய்தது குறித்து உள்துறை அமைச்சு, சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருவதாக புதன்கிழமை (ஆகஸ்ட் 21) தெரிவித்தது.

நீதிமன்ற விசாரணை, தடுப்புக்காவல், சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் போன்ற நடவடிக்கைகள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படலாம் என்று அமைச்சு கூறியது.

அமீர் ஹம்சாவின் போதனைகள் சிங்கப்பூரின் சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை என்றும் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுபவை என்றும் உள்துறை அமைச்சு, புதன்கிழமை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டது.

‘அல் காய்தா’ பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக உள்ள ‘அன்சர் அல் இஸ்லாம்’ என்ற பங்ளாதேஷ் அமைப்பில் செல்வாக்கு பெற்றுள்ளவராகக் கருதப்படும் அமீர் ஹம்சா, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பங்ளாதேஷில் கைது செய்யப்பட்டவர்.

இது குறித்து புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், துவாஸ் வட்டாரத்தின் டெக் பார்க் கிரெசன்ட்டிலுள்ள லந்தானா லாட்ஜ் தங்கும் விடுதியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அவ்வாறு சமய போதனை நடைபெற்றதாகக் கூறினார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி சிங்கப்பூரைவிட்டு வெளியேறிய அமீர் ஹம்சாவைப் பற்றிய புகார்கள் காவல்துறைக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி கிடைத்தன.

சமய போதனைக்கு ஏற்பாடு செய்தவர், முறையான காவல்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றார் அமைச்சர் சண்முகம்.

சட்டவிரோத போதனை பற்றிய செய்தி முதன்முதலாக ‘ரெட்டிட்’ சமூகத் தளத்தில் சில நாள்களுக்கு முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் பெரிய கூட்டத்துக்குமுன் ஓர் ஆடவர் பேசிக்கொண்டிருந்ததைக் காட்டும் காணொளிகள் அதில் பதிவிடப்பட்டன.

தீவிரவாத எண்ணம் கொண்டுள்ள பங்ளாதேஷிய போதகர் ஒருவர் அதிகாரிகளின் கவனத்தில் படாமல் சிங்கப்பூருக்குள் நுழைந்து தேசிய தினத்தன்று உரையாற்றியது கவலைக்குரிய விவகாரம் என்று அந்தப் பதிவு குறிப்பிட்டது.

வெளிநாட்டினரை வரவேற்கும் இடமாக சிங்கப்பூர் இருக்கவேண்டும்

அமீரின் போதனைகள் சிங்கப்பூரின் சமயச் சார்பற்ற பண்புகளை மட்டுப்படுத்தி, சமய சகிப்பின்மையை வளர்த்து, முஸ்லிம் அல்லாதவர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதைத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

போதனைகளின் மூலம் வன்முறையைத் தூண்டியதன் தொடர்பில் அமீர் ஹம்சா, 2021ல் பங்களாதேஷ் அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

அதே ஆண்டில் பங்ளாதேஷ் நாடாளுமன்றத்தைத் தாக்க திட்டமிட்டுக்கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், அமீரின் பரப்புரைகளிலிருந்து ஊக்கம் பெற்றதாகக் கூறினர்.

தாக்குதல்களை நடத்த தன் ஆதரவாளர்களை ஊக்குவித்ததை அமீர் ஹம்சா மறுத்தபோதும், சமயத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதையும் போதனைகளின் வழி தீவிரவாதத்தைத் தான் பரப்புவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

2023ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகச் செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

“அமீர் ஹம்சா பெயர் எங்கள் தரவுத்தளத்தில் உள்ளது. அவரை நாங்கள் அடையாளம் கண்டிருப்போம். ஆனால் அவரது பெயரைப்போல உள்ள மற்றொரு பெயரைக் கொண்ட கடப்பிதழைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அந்நேரத்தில் அவரது அங்க அடையாளம் குறித்த எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை. அவரது கடப்பிதழ், சட்டபூர்வமாக இருந்ததுபோலக் காணப்பட்டது,” என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

விமான நிலையம் வழியாக இங்கு வருவோரை வரவேற்கும் அதேநேரத்தில் அமீர் ஹம்சா போன்றவர்கள் சிங்கப்பூருக்குள் வருவதைத் தடுக்கவேண்டிய பொறுப்பும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்திற்கு இருப்பதாகத் திரு சண்முகம் கூறினார்.

“இந்தச் செயல் உண்மையிலேயே கடினமானது. இதற்கு முன்னதாக போதகர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்கு வருவது பலமுறை தடை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையான கடப்பிதழைப் போன்றே வைத்திருந்ததால் இவரால் உள்ளே நுழைய முடிந்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் வசிக்கும் பங்ளாதேஷிகளிடையே பயங்கரவாதப் போக்கு அதிகரிக்கவில்லை

2015 முதல் தற்போது வரை, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு பங்ளாதேஷைச் சேர்ந்த ஏறக்குறைய 40 பேரை விசாரித்திருப்பதாகத் திரு சண்முகம் கூறினார்.

சிங்கப்பூரில் 200,000க்கும் மேற்பட்ட பங்ளாதேஷியர் உள்ளனர். அவர்களில் 40 என்பது மிகச் சிறிய எண்ணிக்கை என்றார் அமைச்சர்.

இருந்தபோதும் மெத்தனமின்றி, சிங்கப்பூரின் வெவ்வேறு சமூகத்தினருடன் இணைந்து செயலாற்றுவதாக அவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் எது ஏற்கத்தக்கது, எது ஏற்கத்தகாதது என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்துவோம். மேலும், பிற இனத்தையோ சமயத்தையோ தாக்குபவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்