சிங்கப்பூர்ப் பண்ணைகளுக்கு உதவ $70 மில்லியன் வேளாண் உணவுக் குழும உருமாற்ற நிதி

விவசாயத்திற்கு உதவிக்கரம்; மறுமலர்ச்சி காணவிருக்கும் உணவு உற்பத்தித்திறன்

சிங்கப்பூர்ப் பண்ணைகளுக்கு உதவ $70 மில்லியன் வேளாண் உணவுக் குழும உருமாற்ற நிதி

2 mins read
0700ad6c-fab8-46da-b911-3e53fd85b279
உள்ளூர்ப் பண்ணைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் அதிக அளவிலான விளைச்சலைப் பெற உதவும் வகையிலும் ‘ஏசிடி’ நிதி விரிவாக்கம் காண்கிறது. - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2
Google News Preferred Icon

நாட்டின் உணவு உற்பத்தி மீள்திறனை வலுப்படுத்தும் முயற்சியின் முக்கிய அங்கமாக வேளாண் உணவுக் குழும உருமாற்ற நிதியின்கீழ் (ஏசிடி) இரண்டாம் தவணையாக $70 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, இறக்குமதியைப் பெரிதும் சார்ந்திருக்கும் சிங்கப்பூரின் உணவு மீள்திறனைத் தொடர்ந்து வலுப்படுத்த அரசு கைக்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்து அவர் விளக்கினார்.

2021ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட ‘ஏசிடி’ நிதிமூலம் இதுவரை ஏறத்தாழ 150 திட்டங்களுக்கு $55 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக திரு ஸாக்கி தெரிவித்தார்.

மேலும், உள்ளூர்ப் பண்ணைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் அதிக அளவிலான விளைச்சலைப் பெற உதவும் வகையிலும் தற்போது அந்த நிதி விரிவாக்கம் காண்கிறது என்று அவர் சொன்னார்.  

அதன்படி, ‘ஏசிடி நிதி 2’ என்று குறிப்பிடப்படும் அந்த நிதி, 2026 ஏப்ரல் தொடங்கி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும். பண்ணைகளின் தொழில்நுட்ப உத்திகளும் உள்ளூர் வேளாண்மையின் ஆற்றலும் வளம்பெறச் செய்வதை அந்நிதி இலக்காகக் கொண்டுள்ளது.

அதேபோல, உள்ளூர் உற்பத்தியில் இடம்பெற்றுள்ள பல்வேறு தரப்பினரிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை வலுவாக்க செயல்திறன் உருமாற்றத்திற்கான தொழில்முறைப் பங்காளித்துவ மானியமும் அறிமுகப்படுத்தப்படுவதாகத் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி கூறினார். 

சிங்கப்பூர் உணவுத் தேவையை 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இறக்குமதிகள்தான் பூர்த்திசெய்கின்றன.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் உள்ளூர் உணவு உற்பத்தி, நீர் வேளாண்மை, ஒருங்கிணைந்த மீன்குஞ்சு வளர்ப்பு, அதற்கான ஆதரவுத் திட்டம் என நிலத்தில் விளையும் காய்கனிகள் தொடங்கி கடலுணவு சார்ந்த உணவுவரை உள்ளூர் உணவுத் துறைக்கு வலுசேர்க்கும் பல அறிவிப்புகள் இடம்பிடித்திருந்தன.

உரையின்போது சிறந்த வகை மீன்கள், உயர்தர முட்டைகளை உள்ளூர்ப் பண்ணைகள் பெறும் இலக்குடன் நவம்பர் 2024ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட தேசிய கடல்மீன் நிலையம், மீன்குஞ்சு வளர்ப்பு அங்கீகரிப்புத் திட்டம் நிறுவப்பட்டதாக திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

தேசிய மீன் வளர்ப்புத் திட்டமானது சங்கரா மீன்கள், வெண்ணிறால்  இடம்பெறும் வகையில் விரிவாக்கம் காணவுள்ளது.
தேசிய மீன் வளர்ப்புத் திட்டமானது சங்கரா மீன்கள், வெண்ணிறால் இடம்பெறும் வகையில் விரிவாக்கம் காணவுள்ளது. - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

அவ்வகையில், தேசிய மீன் வளர்ப்புத் திட்டமானது சங்கரா மீன்கள், வெண்ணிறால் இடம்பெறும் வகையில் விரிவாக்கம் காணும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் உள்ளூர் உணவு உற்பத்தி, நீர் வேளாண்மை உட்பட உள்ளூர் உணவுத் துறைக்கு வலுசேர்க்கும் பல அறிவிப்புகள் இடம்பிடித்திருந்தன.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் உள்ளூர் உணவு உற்பத்தி, நீர் வேளாண்மை உட்பட உள்ளூர் உணவுத் துறைக்கு வலுசேர்க்கும் பல அறிவிப்புகள் இடம்பிடித்திருந்தன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், வலுத்துவரும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய திரு ஸாக்கி, உணவுத்துறையில் உலகளாவிய விநியோகம் தொடர்பில் நிலவும் சூழலை சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்னும் அணுக்கமாகத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் சொன்னார்.

இதன்மூலம் இடையூறு இருந்தாலும் தங்குதடையின்றி உணவுப் பொருள் விநியோகம் இருப்பதைத் தொழில்துறைகள் உறுதிசெய்ய இயலும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்