உலக நாடுகள் சிங்கப்பூருடன் இணைந்து செயல்பட நம்பகமான தற்காப்பு முக்கியம்: சான் சுன் சிங்

உலக நாடுகள் சிங்கப்பூருடன் இணைந்து செயல்பட நம்பகமான தற்காப்பு முக்கியம்: சான் சுன் சிங்

2 mins read
5933ad25-7ccd-4465-a86f-dc55364c78ec
சிங்கப்பூர் ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (ஜூலை 1) ஹில் ஸ்திரீட்டில் உள்ள சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற் சபையில் நடைபெற்ற பற்றுறுதி நிகழ்ச்சியில், (இடமிருந்து) சீன வர்த்தக தொழிற்சபையின் தலைவர் கோ சூன் கெங், தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், தற்காப்புப் படைகளின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் ஏரன் பேங் மற்றும் பலரும் பற்றுறுதி எடுத்துக்கொண்டனர் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிடம் நம்பகமான தற்காப்புப் படை இல்லையெனில், உலக நாடுகள் சிங்கப்பூருடன் இணைந்துசெயல்படவோ, வணிகம் செய்யவோ முன்வராது என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

தற்காப்பு நம்பகத்தன்மை என்பது ஒவ்வொரு வீரரின் முயற்சியையும் பொறுத்தது என்று சிங்கப்பூர் ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (ஜூலை 1) சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற் சபையில் நடைபெற்ற பற்றுறுதி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறினார்.

கடந்த மே மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற ‘சாங்ரி-லா கலந்துரையாடல்’ பாதுகாப்பு மாநாட்டைக் குறிப்பிட்ட அமைச்சர் சான், தற்காப்புத் துறையில் நம்பகத்தன்மையுடனும் நாணயத்துடனும் விளங்குவதால் மட்டுமே உலக நாடுகள் சிங்கப்பூருடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்த விரும்புகின்றன என்றார்.

பல ஆண்டுகளாக தேசிய சேவையாளர்கள் இந்த நம்பகத்தன்மையை சிறப்பாகக் கட்டியெழுப்பியுள்ளனர். எனினும், சிங்கப்பூர் எதிலும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. எதிரிகள் ஒரே ஒருமுறை மட்டும் தங்களின் திட்டத்தில் வெற்றி பெற்றால் போதும். ஆனால் நாம் ஒவ்வொருமுறையும், எப்போதும் மிகச் சரியாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று திரு சான் கூறினார்.

நாட்டின் தற்காப்புக்கு வணிக சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவு மிகவும் முக்கியமானது.

தற்காப்பு என்பது ஒட்டுமொத்த நாட்டினரின் கூட்டு முயற்சியாகும்; இதில் அமைதி, நிலைத்தன்மை செழிப்பு ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் குடும்பங்களும், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை போன்ற அமைப்புகளும் முக்கியப் பங்காற்றுகின்றன என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங் கூறினார்.

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நிலவும் இயல்புநிலையைத் தக்கவைக்க அசாதாரண உழைப்பு தேவைப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் அமைதி, நிலைத்தன்மைக்குத் தொடர்ந்து பங்களிக்க தொழிற்சபை கடமைப்பட்டுள்ளது என்று இந்த ஆண்டு 120வது ஆண்டைக் கொண்டாடும் தொழிற்சபையின் தலைவர் கோ சூன் கெங் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டு, ஆயுதப்படை பற்றுறுதி எடுக்கப்பட்டது.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மேலும் மூன்று பற்றுறுதி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹாங் டாட், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஆகியோர் அந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தற்காப்புஆயுதப்படைராணுவம்பாதுகாப்புசான் சுன் சிங்