உள்ளூர் ஊழியரைக் கொண்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ரொக்க மானியம்

உள்ளூர் ஊழியரைக் கொண்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ரொக்க மானியம்

2 mins read
bfee97fa-a47b-481e-8901-e7880451f222
சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியாதரவு குறித்த விவரங்களை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய நடுத்தர நிறுவனங்கள், நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏதுவாக ஒருமுறை வழங்கப்படும் ரொக்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிபெறும் தொழில் நிறுவனகங்கள், ஓர் உள்ளூர் ஊழியருக்கு $500 எனும் அளவில் மானியம் பெறும். ஒரு நிறுவனம் அதிகபட்சமாக $2,500 பெறமுடியும்.

செயல்பாட்டில் உள்ள, குறைந்தது ஓர் உள்ளூர் ஊழியரைப் பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் இந்த மானியத்துக்குத் தகுதிபெறும்.

உள்ளூர் ஊழியரைக் கொண்டிராவிடினும் குறைந்தது ஓர் உள்ளூர் வணிக உரிமையாளரைக் கொண்ட தனியுடைமை, பங்காளித்துவ நிறுவனங்களும் $500 மானியம் பெறும்.

2026 நவம்பரில் வழங்கப்படும் ரொக்க மானியத்தால் ஏறத்தாழ 160,000 வணிகங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் செலவினம் குறித்து எழுந்துள்ள கவலைகளைக் கருத்தில்கொண்டு, அவற்றைச் சமாளிக்கவும் நீண்ட காலத்துக்குத் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளவும் தேவையான ஆதரவு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக வர்த்தக, தொழில்துறை, கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் கூறினார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மூன்று முக்கிய ஆதரவுத் திட்டங்களை அவர் புதன்கிழமை (ஜூலை 29) அறிவித்தார்.

இவற்றின்கீழ், உணவங்காடிக் கடைகள், சந்தைகளில் செயல்படும் கடைகள், வாடகைச் செலவுகளைச் சமாளிக்க ஆதரவுகளையும் பெறவிருக்கின்றன.

மேலும், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான நடைமுறை மூலதனக் கடன் சார்ந்த இடர்களுக்கான அரசாங்கப் பகிர்வு 70 விழுக்காடாக உயர்த்தப்படும்.

தொழில் நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தின் திட்டப்பணிக் கடன்களில், இடர்களுக்கான அரசாங்கப் பகிர்வு 70 விழுக்காடாக உயர்த்தப்படுவதுடன், இந்த ஆதரவு உள்நாட்டுக் கட்டுமானத் திட்டப்பணிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

இந்த ஆதரவு, சவாலான சூழலில், அதிகரித்த செலவுகளைச் சமாளிக்கத் தேவையான நிதியுதவி பெறுவதை எளிதாக்கும் என்றார் திருவாட்டி லோ.

“இக்கடினமான காலகட்டத்தில், தொழில்களுக்கு ஆதரவளிக்கவும் அவற்றை வலுப்படுத்தவும் துறைசார் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வணிகங்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சூழலுக்கேற்ப ​​கூடுதலான, குறிப்பிட்ட இலக்கு சார்ந்த ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்