சிங்கப்பூரில் உயர்நிலையில் நீடிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்

உள்துறை பாதுகாப்புத் துறை அறிக்கை

சிங்கப்பூரில் உயர்நிலையில் நீடிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்

2 mins read
eb3c7d96-c3ce-4352-957e-4798f90a1e30
பே ஃபிரண்ட் பகுதிக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியப் பிரிவு அதிகாரிகள்.. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பாதுகாப்பற்ற சூழல், சிங்கப்பூருக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) தனது ஆண்டு அறிக்கையில் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரவாத அமைப்புகள் தங்களின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி ஆதரவாளர்களைத் தூண்டிவிடுகின்றன. இதனால் உலகளவில் யூத எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, சமூகங்களுக்கிடையிலான பகைமை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழல் இளைஞர்கள் தீவிரவாதத்தின் பால் ஈர்க்கப்படுவதை அதிகரித்துள்ளது.

கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலத்தில் நான்கு ஆக இருந்த இளைஞர்கள் தொடர்பான தீவிரவாதச் சம்பவங்கள், 2022 முதல் 15 என கணிசமாக உயர்ந்துள்ளன.

குறிப்பாக, இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 14 முதல் 19 வயதிற்குட்பட்ட மூன்று இளைஞர்கள், உள்ளூரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு, அதன் இறுதிக் கட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளையில், 2002ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதான 80 விழுக்காட்டுக்கும் அதிகமான சிங்கப்பூரர்களின் நடத்தை மறுவாழ்வுப் பயிற்சியில் நல்ல முன்னேற்றம் கண்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேற்கத்திய நாடுகளுடனான இணக்கமான உறவு, நாட்டின் முக்கிய அடையாளச் சின்னங்கள் ஆகியவை காரணமாக சிங்கப்பூர் இன்னமும் ஓர் இலக்காகவே உள்ளது.

சிரியாவின் அல்-ஹோல் முகாமில் இருந்து தப்பித்த 308 இந்தோனீசியத் தீவிரவாதிகள் தென்கிழக்காசியாவிற்குத் திரும்பும் ஆபத்தும், காஸா அமைதித் திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட்டு மலேசியாவில் குடியேறியுள்ள ஹமாஸ் தொடர்புடைய 15 முன்னாள் கைதிகளின் நடமாட்டமும் வட்டாரப் பாதுகாப்பிற்குப் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

கடந்த ஜூலை 2025 முதல் எட்டுச் சிங்கப்பூரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 14 வயது மாணவன் ஒருவன் தனது பள்ளியில் தாக்குதல் நடத்த 21 பக்க அறிக்கை தயாரித்ததற்காகவும், 15 வயது சிறுவன் ஒருவன் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதற்காகவும் கைது செய்யப்பட்டனர்.

இணைய விளையாட்டுகள், சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குடும்பத்தினரும் நண்பர்களும் தொடக்கநிலை அறிகுறிகளைக் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது மிக முக்கியம் என்று ஐஎஸ்டி வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்காவல்துறைபாதுகாப்புசுற்றுக்காவல்தீவிரவாதம்பயங்கரவாதம்அச்சுறுத்தல்