ஹா பா வில்லா, ஹெல்ஸ் மியூஸியம்ஸ் ஹா ரோர் வில்லா 3இன் (Haw Par Villa மற்றும் Hell’s Museum’s Haw Ror Villa 3) ஒரு பகுதியாக ‘ஸ்டோரி ஜென்’ (Story Gen) எனும் ‘திகில்’ கருப்பொருளில் அமைந்த நடுவம் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நூலக வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடுவம் ‘திகில்’ கருப்பொருளில் அமைந்துள்ள முதல் நடுவமாகும். தேசிய நூலக வாரியம் அமேசான் இணைய சேவைகளுடன் (AWS) இணைந்து நிறுவியுள்ள இந்த நடுவம் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவால் இயங்கும்.
அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள இந்த நடுவம், அக்டோபர் 19, 25, 26, 27 உள்ளிட்ட தேதிகளிலும் நவம்பர் 2, 3ஆம் தேதிகளில் நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரை இயங்கும் இந்த நடுவத்தில், 15 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு திகிலான கதைக்குள் வருகையாளர்கள் சென்றுவரும் அனுபவத்தைத் தரும் வண்ணம் அமைந்துள்ளது இந்த நடுவம். சுற்றுப்புற ஒலி, வெளிச்சம் என பயத்தைத் தூண்டும் உணர்வை வெளிக்கொணரும் அம்சங்களையும் இது உள்ளடக்கும்.
ஆறு பிரபல உள்ளூர் திகில் கதைகளிலிருந்து தங்களுக்குப் பிடித்த கதையின் கருப்பொருள், கதையின் இடஅமைவு, கதாபாத்திரங்கள் உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்யலாம். உரிய தேர்வுகளை உள்ளீடு செய்த பின்னர், தனிப்பயனாக்கப்பட்ட அக்கதைக்குள் சென்றுவருவது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.
இதன் தொடர்பில், தேசிய நூலக வாரியத்தின் ஏறத்தாழ இருபது தேர்ந்தெடுக்கப்பட்ட திகில் கதைகளையும் வாசகர்கள் படிக்கலாம். இதற்கென தனி அனுமதிக் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.