ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் புதிய வார இதழ்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் புதிய வார இதழ்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Oct 2026 - 4:18 pm

1 mins read

அக்டோபர் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நான்கு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் சிறப்பு இலவச வார இதழை வெளியிடவுள்ளது.

வாசிப்பை ஊக்குவிப்பதற்கான தேசிய இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க இந்த 20 பக்க இதழ் வெளியிடப்படுகிறது. அண்மையில் தொடங்கப்பட்ட ‘ரீட்எஸ்ஜி’ இயக்கத்தின் ஓர் அங்கமாக தேசிய நூலக வாரியத்துடன் சேர்ந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வார இதழை வெளியிடுகிறது.

அந்த வார இதழ் சில வீடுகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும். அதோடு, பிடோக், பூன் லே, ராஃபிள்ஸ் பிளேஸ், தோ பாயோ எம்ஆர்டி நிலையங்களில் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாண்டுகால ரீட்எஸ்ஜி திட்டத்துக்கு எஸ்பிஎச் மீடியா நிறுவனம் ஒரு பங்காளியாக இருப்பதையொட்டி இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உள்ளூரில் சிங்கப்பூரர்களைப் பாதிக்கும் செய்திகள், வரைகலைப் படைப்புகள், முக்கிய உலக, வணிகச் செய்திகள் போன்றவை வார இதழில் இடம்பெறும். நூலாய்வுகள், பரிந்துரைகள் போன்றவையும் அதில் இடம்பெறும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் ஜேமி ஹோ, “இந்த அம்சங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இடம்பெறுபவற்றில் ஒரு சிறு பங்குதான். அதேவேளை, வாசிப்புப் பழக்கத்தை மக்கள் வளர்த்துக்கொள்ள ஊக்குவிப்பதோடு நம்பகமான, அதிகாரபூர்வமான செய்திகள் பக்கம் அவர்களின் கவனத்தைத் திருப்புவது இந்நடவடிக்கையின் இலக்காகும்.

“வார இதழைப் பெறுவோர், செய்தித் துணுக்குகளை அச்சிதழ் வடிவில் வாசிக்கும் இன்பத்தை மீண்டும் உணர்வர் என்று நம்புகிறோம்,” என்றார். வார இதழைப் பெறுவோர் தங்களின் வாசிப்புப் பழக்கம் குறித்த கருத்தாய்வில் இடம்பெறும் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்