சிங்கப்பூரின் முதன்மை ஆங்கிலச் செய்தித்தாளான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அதன் 180வது ஆண்டுநிறைவை எட்டவிருக்கிறது.
அதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜூலை 11) சாங்கி விமான நிலையத்தின் ‘ஜுவல்’ வளாகத்தில் கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் முக்கிய உரையாற்றினார்.
சிங்கப்பூர் வரலாற்றின் ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பதிவு செய்துள்ளது என்று பிரதமர் தமது உரையில் பாராட்டினார்.
“செய்தித்தாள்களை நாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மின்னிலக்க, சமூகத் தளங்கள் வாயிலாக அதிகமானோர் செய்திகளைப் பெறுகின்றனர்,” என்பதைத் திரு வோங் சுட்டிக்காட்டினார்.
இந்த மாற்றங்களுக்கு ஊடகங்கள் தொடர்ந்து தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
“ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெறும் செய்தித்தாளன்று; அது சிங்கப்பூரின் நம்பகமான குரல்,” என்று அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வலைத்தளமும் செயலியும் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.
அதுமட்டுமன்றி, ‘இதயத்துடிப்புகளும் தலைப்புச் செய்திகளும்: சிங்கப்பூர்க் கதையைச் சொல்லும் 180 ஆண்டுகள்’ (Heartbeats And Headlines: 180 Years Of Telling The Singapore Story) என்ற பயணக் கண்காட்சி ஒன்றும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் ஜூலை 12 முதல் ஜூலை 20ஆம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும்.
வளர்ந்து வரும் உலகில் முன்னோக்கிச் செல்லும் நமது ஊடகப் பயணம் சவால்மிக்கதாக இருக்கும் என்றார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் ஜேமி ஹோ.
“ஒரு நம்பகமான ஊடகமாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தைக் கொண்டு இந்தச் சவால்களை எதிர்கொள்வோம்,” என்று அவர் உறுதியளித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூரின் மிகவும் நம்பகமான செய்தி ஊடகம் என்று அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தர வரிசைப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

