உத்திபூர்வ பாதுகாப்பு ஒப்பந்தம்; தற்காப்பு அமைச்சர்கள் கடப்பாடு

உத்திபூர்வ பாதுகாப்பு ஒப்பந்தம்; தற்காப்பு அமைச்சர்கள் கடப்பாடு

2 mins read
b787c504-dfe2-4d8c-b4fe-a548356f56d7
தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், வட்டாரப் பாதுகாப்புக் கட்டமைப்பில் ‘ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள்’  முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

‘ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள்’ (FPDA) அமைப்பின் உயர் அதிகாரிகள் நீண்டகாலப் பாதுகாப்புக் கட்டமைப்புக்கான தங்களது நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடைபெற்ற காலை உணவுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த ஐந்து தலைவர்களும், இந்த ஏற்பாட்டின் தொடர்ச்சியான உத்திபூர்வ முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டனர்.

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், வட்டாரப் பாதுகாப்புக் கட்டமைப்பில் இந்த ஏற்பாடு முக்கியப் பங்கு வகிக்கும் என அந்தத் தலைவர்கள் கூறினர்.

1971-இல் உருவாக்கப்பட்ட எஃப்பிடிஏ அமைப்பு, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளை ஆலோசனைப் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்றின் கீழ் இணைக்கிறது.

இந்த வட்டாரத்திலிருந்து பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆயுதத் தாக்குதல் ஏதேனும் நிகழும் பட்சத்தில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் உதவி கிடைப்பதை உறுதிசெய்ய இந்த ஏற்பாடு உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூரின் ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெறும் வருடாந்திரத் தற்காப்பு உச்சநிலைக் கூட்டத்தில் ‘ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள்’ அமைப்பு வழக்கமாக அங்கம் வகிக்கிறது.

இக்கூட்டத்தில் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர் கிறிஸ் பெங்க், மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டின், பிரிட்டனின் பாதுகாப்புக் கொள்கைக்கான தலைமை இயக்குநர் பால் வியாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் உறுப்பு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து பணியாற்றும் திறன்களை அந்த அமைப்பு மேம்படுத்தியுள்ளதாகச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் ஆண்டின் முதல் பாதியில் ‘பெர்சாமா ஷீல்ட்’ பயிற்சியிலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் ‘பெர்சாமா லீமா’ பயிற்சியிலும் கலந்துகொள்கின்றனர்.

இந்த ராணுவப் பயிற்சிகள் சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றின் தற்காப்பில் கவனம் செலுத்துகின்றன.

இதற்கிடையே, இவ்வாண்டின் ஷங்ரிலா கலந்துரையாடலில் இடம்பெற்ற விவாதங்கள், முன்பைவிடச் சிக்கலான, நிலைகுலைந்த ஓர் உலகில் உரையாடல், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (மே 31) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், புரிதலை ஏற்படுத்தவும், பங்காளித்துவங்களை வலுப்படுத்தவும் நல்ல வாய்ப்பை இந்த உச்சநிலை மாநாடு வழங்குவதாகவும் அவர் அந்தப் பதிவில் கூறினார்.

“வெளிப்படையான, ஆக்கபூர்வமான ஈடுபாட்டுக்கான நம்பகமான மற்றும் நடுநிலையான தளமாகச் செயல்படச் சிங்கப்பூர் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. இது நமது வட்டாரத்திலும் அதனைத் தாண்டியும் உள்ள வேறுபாடுகளைக் களையவும் ஒத்துழைப்பை வளர்க்கவும் உதவுகிறது,” என்று பிரதமர் வோங் எழுதியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்