லத்தீன் அமெரிக்காவுடனான உறவுகளை சிங்கப்பூர் வலுப்படுத்தி வருவதாகவும் நிச்சயமற்ற உலக வர்த்தக நிலவரத்தில் அவ்வாறு செய்வது அவசரமானது, அவசியமானது என்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு வியாழக்கிழமை (ஜூலை 31) நடத்திய ‘லாட்டாம்’ (LATAM) மாநாட்டில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
தற்போதைய சூழலில், நடப்பில் உள்ள பங்காளிகளுடனும் புதிய பங்காளிகளுடனும் சிங்கப்பூர் தொடர்ந்து உறவைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார் திரு டான்.
“உலகளவில் வர்த்தகக் கூட்டாளிகள் மாறிவரும் நிலையிலும் பொருளியல் சரிவு தென்படும் சூழலிலும் லத்தீன் அமெரிக்கா ஆற்றல் நிறைந்த வட்டாரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. சிங்கப்பூரும் சிங்கப்பூர் நிறுவனங்களும் அதனைக் கவனிக்கத் தவறக்கூடாது.
“சிங்கப்பூரும் பரந்து விரிந்த ஆசிய-பசிபிக் வட்டாரமும் லத்தீன் அமெரிக்காவில் இருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் இரு வட்டாரங்களுக்கும் இடையில் பொதுவான பண்புகள் உள்ளன.
“இளமையான, நவீன ஊழியரணி, பரந்துவிரிந்துள்ள தொழில்நுட்ப ஏற்பு, நீடித்த வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் நிலவும் பொதுவான ஆர்வம் போன்றவை அந்தப் பண்புகளுள் அடங்கும்,” என்று திரு டான் தமது உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக வளர்ச்சியை அவர் விளக்கினார்.
இரண்டுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு $28.5 பில்லியனாக இருந்த நிலையில் இவ்வாண்டு அது $35.3 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, இயந்திரம், மின்னணுப் பொருள்கள், பெட்ரோலியம், வேளாண் விளைபொருள்கள் போன்ற துறைகளில் வர்த்தக வளர்ச்சி பதிவாகி உள்ளது.
அதேபோல, சிங்கப்பூருக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் இடையிலான சேவைகளும் வளர்ந்துள்ளன. பொறியியல், தொலைத்தொடர்பு, கணினி மற்றும் தகவல், போக்குவரத்து போன்றவற்றில் சேவை அதிகரித்துள்ளதாக திரு டான் தெரிவித்தார்.
“நிறுவன மட்டத்தில் வலுவடைந்து வரும் நமது வர்த்தகக் கட்டமைப்பு இந்த வளர்ச்சிப் போக்கை தொடர்ந்து ஆதரித்து ஊக்குவிக்கும்,” என்றார் அவர்.

