பெரிய குடும்பங்களுக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
பிரதமராக திரு லாரன்ஸ் வோங் முதன்முறை தாக்கல் செய்த 2025ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற வரவுசெலவு அறிக்கையில் குடும்பங்களுக்கான நிதி ஆதரவுத் திட்டங்கள் பரவலாக இடம்பிடித்திருந்தன.
சிங்கப்பூரர்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சமாக ‘பெரிய குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டம்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் திரு வோங்.
அதன்படி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிங்கப்பூர்க் குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அரசாங்கத்திடமிருந்து இனி கூடுதல் ஆதரவை எதிர்பார்க்கலாம்.
பெரிய குடும்பங்கள் பெறவுள்ள ஆதரவுகள்
குழந்தை மேம்பாட்டுக் கணக்கு தொடக்க மானியம்: தற்போது அனைத்து சிங்கப்பூர் பிள்ளைகளும் மேற்கூறிய கணக்கில் தொடக்க மானியமாக $5,000 பெறுவர். அண்மைய அறிவிப்பின்படி பிப்ரவரி 18ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த குழந்தைக்கும் இத்தொகை இனி இரட்டிப்பாக அதாவது $10,000ஆகக் கிடைக்கவுள்ளது.
இத்தொகை பிப்ரவரி இறுதியிலிருந்து வழங்கப்படவுள்ளது. இந்தத் தொடக்க மானியத்தைப் பிள்ளைகளின் பாலர்ப் பள்ளி, சுகாதாரப் பராமரிப்பு சார்ந்த செலவினங்களுக்குப் குடும்பங்கள் பயன்படுத்தலாம்.
பெரிய குடும்பங்களுக்கான மெடிசேவ் மானியம்: மார்ச் நடுப்பகுதியில் இருந்து இந்த மானியம் கிடைக்கவுள்ளது. பிப்ரவரி 18ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த குழந்தைகளுக்காக அப்பிள்ளைகளின் பெற்றோர் $5,000 மெடிசேவ் மானியம் பெறவுள்ளனர். இந்த மானியத்தைத் தாயார் தமது பிரசவ செலவுகளை எதிர்கொள்ளவோ குடும்ப உறுப்பினர்களின் சுகாதாரத் தேவைகளைச் சமாளிக்கவோ பயன்படுத்த இயலும்.
பெரிய குடும்பங்களுக்கான LifeSG சிறப்புத் தொகை: பிள்ளை வளர்ப்பின் ஆரம்பக் காலங்களில் நீடித்தத்தன்மையுள்ள ஆதரவு வழங்கும் இலக்குடன் களம் காணவுள்ளது ‘பெரிய குடும்பங்களுக்கான LifeSG சிறப்புத் தொகை’ எனும் புதிய திட்டம்.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த சிங்கப்பூர்க் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதியர், தங்கள் பிள்ளைகள் ஒன்று முதல் ஆறு வயதை எட்டும்வரை செலவினங்களைச் சமாளிக்க ஆண்டுதோறும் மின்னிலக்கப் பணப்பையில் $1,000 பெறுவர்.
“அதிக குழந்தைகளைக் கொண்ட தம்பதிகள் பெரும்பாலும் கூடுதல் செலவுகளைப் பற்றி வருத்தமுறுகின்றனர். ஏனெனில் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவைகள் அதிகரிக்கும்,” என்று சுட்டிய பிரதமர், இதன் தொடர்பில் மணமுடித்த தம்பதிகள் கூடுதல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள பெரிய குடும்பங்களுக்கான திட்டம் நடப்புக்கு வருகிறது,” என்றும் கூறினார்.
“மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற அல்லது பெற விரும்பும் திருமணமான தம்பதிகளை ஆதரிப்பதற்காகப் பெரிய குடும்பத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்,” என்றார். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் குடும்பங்களுக்கு உதவிட கூடுதல் உதவிகளை தரவுள்ளதாக உறுதியளித்துள்ளார் பிரதமர் வோங்.
2024ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணியின்போது பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் வோங் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் குடும்பங்களுக்கு உதவிடக் கூடுதல் உதவிகளைத் தரவுள்ளதாக உறுதியளித்துள்ளார் பிரதமர் வோங்.
பெரிய குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டத்தால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 80 மில்லியன் வெள்ளி வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.