சட்டவிரோதமான முறையில் யு-டர்ன் செய்வது, இரு வெள்ளைக் கோடுகள் உள்ள சாலைப் பகுதிகளின் மேல் வாகனத்தை ஓட்டுவது போன்ற செயல்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைப் போக்குவரத்துக் காவல்துறை முடுக்கிவிடுகிறது.
அத்தகைய செயல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் புதிய டிவிஇசி (TVEC) கேமராக்களின் மூலம் அடையாளம் காணப்படுவர். இந்தப் புதிய கேமராக்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 11 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இது, டிவிஇசி கேமராக்களைக் சோதித்துப் பார்த்து அவற்றை செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் இயங்கச் செய்ய வைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகும். 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இந்த கேமராக்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துக் காவல்துறை வியாழக்கிழமை (அக்டோபர் 30) தெரிவித்தது.
உபி அவென்யூ மூன்றில் உள்ள தங்கள் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அது இத்தகவலை வெளியிட்டது.
ஆரஞ்சு, வெள்ளை நிறக் கோடுகளைக் கொண்டுள்ள இந்த கேமராக்கள், காணொளி பகுப்பாய்வு முறைகளையும் (video analytics) வாகன எண்களை அடையாளம் காணும் தானியக்க முறையையும் பயன்படுத்தி சாலைக் குற்றங்களை அடையாளம் காண்கின்றன. சாலைகளில் உள்ள மஞ்சள் நிற ‘வட்டாரங்களில்’ (yellow boxes) வாகனங்கள் நிற்பது போன்ற சாலை விதிமீறல்களும் அடையாளம் காணப்படும் குற்றங்களில் அடங்கும்.
டிவிஇசி கேமரா சோதனை முதன்முறையாக செப்டம்பர் மாதம் நடந்தது. சம்பந்தப்பட்ட 11 இடங்களில் 6,000க்கும் அதிகமான சாலைக் குற்றங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த 11 இடங்கள், பொதுமக்களின் கருத்துகளுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டன.
இரு வெள்ளைக் கோடுகள் உள்ள சாலைப் பகுதிகளுக்கு மேல் வாகத்தை ஓட்டுவதுதான் ஆக அதிகமாகக் காணப்பட்ட சாலைக் குற்றம் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.
புளோக் 212Bக்கு அருகே உள்ள பிடாடாரி பார்க் டிரைவ், ஷெல்ஃபோர்ட் ரோட்டுக்கு அருகே உள்ள டன்யர்ன் ரோட் பகுதி, குவீன்ஸ்வே கடைத்தொகுதிக்கு முன்னால் உள்ள பகுதி, புளோக் 533க்கு அருகே உள்ள பீஷான் ஸ்திரீட் பகுதி 14 உள்ளிட்ட 11 இடங்களில் புதிய டிவிஇசி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேமராவும் சராசரியாக தினமும் சுமார் 20 சாலைக் குற்றங்களை அடையாளம் கண்டன.
தொடர்புடைய செய்திகள்
டிவிஇசி கேமராக்கள் அடையாளம் கண்ட, சாலை விதிமீறல் காரணமாக நிகழ்ந்த விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களைப் போக்குவரத்துக் காவல்துறை வெளியிடவில்லை.

