மிகப் பெரிய புதுப்பிப்புப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ள, சிங்கப்பூரின் அக்கம்பக்க வட்டார அரசாங்க நிலப் பகுதிகளுக்கான ஏலக் குத்தகையில் அண்மையில் கடும் போட்டி நிலவியது.
சொத்துச்சந்தை மேம்பாட்டாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், கடந்த அக்டோபர் மாதம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகப் பதிவான புதிய வீடுகளின் விற்பனை, கடன் தொடர்பில் குறைவான செலவுகள், இந்த ஆண்டு (2025) எதிர்பார்க்கப்பட்டதைவிட மேம்பட்டிருந்த சிங்கப்பூரின் பொருளியல் நிலை போன்றவை அமைந்திருந்தன.
இந்த ஆண்டு விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட அரசாங்க நிலப் பகுதி ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஏலக்குத்தகை நிறைவுபெற்ற அத்தகைய ஐந்து நிலப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் எட்டு முதல் 10 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் நகர மறுசீரமைப்பு ஆணையப் பெருந்திட்டம் 2025ன்கீழ் உருமாற்றம் காணும் என அறிவிக்கப்பட்டவை.
இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவிய ஏலக் குத்தகை பிடோக் ரைஸ் நிலப்பகுதிக்கானது. தானா மேரா ரயில் நிலையத்து அருகே அமைந்துள்ள அந்த நிலப்பகுதியில் 380 கூட்டுரிமை வீடுகளைக் கட்ட இயலும்.
நவம்பர் 27ஆம் தேதி அந்த நிலப்பகுதிக்கான ஏலக் குத்தகைக்கு 10 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குவோக் குழுமத்தின் ஆல்கிரீன் புரோபர்ட்டிஸ் நிறுவனம் ஆக அதிகமாக $464.8 மில்லியன் தொகையைக் குறிப்பிட்டிருந்தது.
வரவிருக்கும் சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்துக்கும் பாய லேபார், தெம்பனிஸ், சாங்கி வர்த்தக நடுவங்களுக்கும் அருகில் அமைந்திருப்பது அந்த நிலப்பகுதியின் சிறப்பம்சம்.
நவம்பர் 12ஆம் தேதி, நியூட்டன் ரயில் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள மற்றொரு நிலப்பகுதிக்குத் தைவானின் ஹுவாங் சியாங் கட்டுமான நிறுவனம் ஆக அதிக ஏலத் தொகையாக $566.29 மில்லியனைக் குறிப்பிட்டிருந்தது. அந்த நிலப்பகுதியில் 99-ஆண்டுக் குத்தகையின்கீழ் 340 தனியார் வீடுகளைக் கட்ட முடியும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஜூன் மாதம் டர்ஃப் சிட்டி நிலப் பகுதிக்கு 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஃபிரேசர்ஸ் புரோப்பர்டி, செகிசுய் ஹவுஸ், சிஎஸ்எல் லேண்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆக அதிகமாக $491.5 மில்லியன் தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்த அந்த நிலப்பகுதியில் 380 வீடுகளைக் கட்ட முடியும்.
வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் இத்தகைய கடும் போட்டி நிலவுவதாகச் சொத்துச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிதாக அறிவிக்கப்படும் விற்பனைத் திட்டங்களுக்கு வரவேற்பு இருக்கும் வரை இந்த நிலை தொடரும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
புதிய பேட்டைகளில் விற்பனைக்கு ஒதுக்கப்படும் முதல் நிலப்பகுதிகள் குறித்துச் சொத்து மேம்பாட்டாளர்கள் அண்மைய மாதங்களில் மிகக் கவனமாகச் செயல்படுவதை அவர்கள் சுட்டினர். அது ரயில் நிலையத்திலிருந்து தொலைவில் அமைந்திருக்கிறதா, அதே இடத்திற்கு அருகே எதிர்காலத்தில் வேறு நிலப்பகுதிகள் ஒதுக்கப்படுமா என்பன போன்ற அம்சங்களில் சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்தும் என்று வல்லுநர்கள் கூறினர்.

