வலுவான சீனா-ஆசியான் பிணைப்பு முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகிறது: பிரதமர் வோங்

வலுவான சீனா-ஆசியான் பிணைப்பு முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகிறது: பிரதமர் வோங்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

16 Nov 2026 - 6:13 pm

2 mins read

மணிலா: புவிசார் அரசியல் பதற்றங்களும் வர்த்தகத் தடைகளும் அதிகரித்துவரும் இன்றைய உலகச் சூழலில், சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புகள் ஒத்துழைப்பு, இருதரப்புக்கும் பலனளிக்கும் பங்காளித்துவத்தின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்வதற்கான மேலுமொரு வழியைக் காட்டுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (நவம்பர் 16) தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசியத் தலைவர்கள், சீனப் பிரதமர் லி சியாங்கைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

பிலிப்பீன்ஸ் தலைநகரில் நடைபெற்ற 29வது ஆசியான்-சீனா உச்சநிலை மாநாட்டில் பிரதமர் வோங் உரையாற்றினார்.

இந்த வட்டாரத்தின் அமைதிக்காகவும் செழிப்புக்காகவும் அணுக்கமாகப் பணியாற்றுவதிலும் பொதுவான நோக்கங்களைக் கண்டறிவதிலும் நடைமுறைக்கு ஏற்ற, இருதரப்புக்கும் பயனளிக்கும் தீர்வுகளை வழங்குவதிலும் ஆசியான் நாடுகளுக்கும் சீனாவுக்கும் பொதுவான, நீடித்த விருப்பம் உள்ளதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

தமக்கு முன்பு உரையாற்றிய இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் கருத்தை மேற்கோள் காட்டிய அவர், “இனிவரும் காலங்களில், நாம் நமது குறிக்கோள்களை மேலும் உயர்த்த வேண்டும்,” என்று கூறினார்.

“பரஸ்பர புரிதலையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தவும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் நாம் மேலும் அணுக்கமாகப் பணியாற்ற வேண்டும்,” என்றார் அவர்.

தமது உரையில் ஒத்துழைப்புக்கான மூன்று முக்கிய அம்சங்களைப் பிரதமர் வோங் கோடிகாட்டினார்.

அதோடு, அடுத்து வரவிருக்கும் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள நாடு என்ற முறையில், இந்த மிக முக்கியமான உறவை முன்னோக்கி எடுத்துச்செல்ல சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

வட்டாரத்தைத் தொடர்ந்து அமைதியாகவும் நிலையாகவும் வைத்திருப்பது முதல் அம்சமாகும். அந்த வகையில், கிழக்காசிய உச்சநிலை மாநாடு, ஆசியான் வட்டாரக் கருத்தரங்கு, ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் உள்ளிட்ட ஆசியான் தலைமையிலான கட்டமைப்புகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம், சீனா ஒரு மதிப்புவாய்ந்த, துடிப்பான பங்காளியாக இருந்து வருகிறது.

பொருளியல் பாலங்களை அமைப்பதை முன்னெடுத்துச் செல்வதும் வெளிப்படைத்தன்மையையும் ஒருங்கிணைப்பையும் ஊக்குவிப்பதுமே ஒத்துழைப்புக்கான இரண்டாவது அம்சமாகும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

வரும் டிசம்பர் மாதம் நடப்புக்கு வரவுள்ள மேம்படுத்தப்பட்ட ஆசியான் - சீனா தடையற்ற வர்த்தகப் பகுதி 3.0, இதற்கு ஓர் உதாரணம் என்று அவர் கூறினார்.

ஆசியான் நாடுகளும் சீனாவும் இணைந்து பணியாற்றுவதற்கான மூன்றாவது அம்சம், புதிய துறைகளில், குறிப்பாக மின்னிலக்கத் துறையில் நடைமுறை ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். அந்த வகையில், அதிக மேம்பாடு கண்டுள்ள உலக நாடுகளில் ஒன்றாகச் சீனா திகழ்கிறது.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்ஆசியான்சீனா