இந்தச் சிக்கலான உலகில் சிங்கப்பூர் தொடர்ந்து நீடிக்கவும் வளர்ச்சிகாணவும் வேண்டுமென்றால் இன்று அது அடைந்துள்ள நிலைக்குக் காரணமான இரு அடிப்படைக் கூறுகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிப்ரவரி 8ஆம் தேதி மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
சவால்களை முன்னதாகவே கண்டறியக்கூடிய, மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள, மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய வலுவான, போட்டித்தன்மைமிக்க அரசாங்கத்தை சிங்கப்பூர் பெற்றிருப்பது அவ்விரு கூறுகளில் ஒன்றாகும்.
இரண்டாவதாக, சிங்கப்பூர் எந்நேரமும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். எத்தகைய உலகில் வாழ்கிறோம், என்னென்ன சவால்களைச் சந்திக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு கனவுகளை நனவாக்க அரசாங்கத்துடன் அணுக்கமாகச் செயல்பட வேண்டும் என்றார் திரு லீ.
அங் மோ கியோ குழுத்தொகுதியின் தெக் கீ வட்டார நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த அமைச்சர் லீ, தெக் கீ சமூக மன்றத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு இரவு விருந்தில் கலந்துகொண்டு ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் சீனத்திலும் பேசினார்.
சிங்கப்பூர் 2024ஆம் ஆண்டில் தலைமைத்துவ மாற்றத்தைச் சுமுகமாக அனுபவித்ததுடன் பணவீக்கம் குறைந்து வந்த நிலையில் அதன் பொருளியலும் 4% வளர்ச்சி கண்டது என்றார்.
இருப்பினும், புதிய ஆண்டில் நிச்சயமற்ற நிலை காத்திருப்பதாக அவர் சுட்டினார்.
அனைத்துலக புவிசார் அரசியலில் பதற்றநிலை, அமெரிக்கா-சீனா இடையே தீர்க்கப்படாத வேறுபாடுகள் ஆகியவற்றோடு அரசாங்கம் தொடர்பாகவும் உலகம் தொடர்பாகவும் புதிய அமெரிக்க நிர்வாகம் மாறுபட்ட ஓர் அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.
அமெரிக்கர்களின் விருப்பங்களை மேலும் கட்டுப்படுத்திப் பார்க்கும் அதேவேளை, அதன் உடனடி நோக்கங்களை அடைவதற்குப் பரிவர்த்தனை சார்ந்த ஓர் அணுகுமுறையை அது கூடுதலாகக் கையாள்வதாக மூத்த அமைச்சர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
வரிவிதிப்புக் கொள்கை தொடர்பான ஒரு கருவியாக அது விரும்பி அணுகுவதுடன் வெளித்தரப்பிலிருந்து வரக்கூடிய ஒரு வருமானமாகவும் அது கருதுகிறது என்றார். அந்த வரிகளால் மற்ற நாடுகள் சலுகைகள் வழங்கவும் கட்டாயப்படுத்தப்படுகின்றன. உலகச் சுகாதார நிறுவனம், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் போன்ற பலதரப்பு கடப்பாடுகளிலிருந்து அது பின்வாங்கியும் உள்ளது.
“அனைத்துலக அமைப்புமுறைக்கு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா இனி தயாராக இல்லை. அதனால், அனைத்துலகச் சூழல் அதன் ஒழுங்குமுறையையும் முன்கூட்டியே அறியக்கூடிய தன்மையையும் கொஞ்சம் இழந்துவிடுகிறது. மற்ற நாடுகளைப் போல் சிங்கப்பூரும் இந்தப் புதிய உண்மைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அமெரிக்காவுடனான நமது வலுவான உறவையும் நட்பையும் தக்கவைத்துக்கொள்ளவும் வேண்டும்,” என்றார் மூத்த அமைச்சர்.
கடந்தகாலத்தில் செய்தது போலவே அரசாங்கம் இனி வரும் சவால்களைப் புரிந்துகொண்டு, அனைத்துலக நிச்சயமற்ற நிலையிலும் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்ல திட்டங்களைத் தீட்டியுள்ளதாக திரு லீ கூறினார்.
எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கூடுதல் உதவி வழங்கப்படுவதை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து வீடமைப்பு, சிங்கப்பூரின் எதிர்காலத்தில் முதலீடு, மேம்பட்ட இணைப்புத்தன்மை, புதிய மருத்துவ வசதிகள், நிலமீட்புத் திட்டம் போன்ற விவகாரங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

