இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சிக்குக் (மசெக) கிடைத்தது இதுவரை காணாத அமோக வெற்றி என்றார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம்.
அதனுடன், நிச்சயமற்ற உலகப் பொருளியல் சூழலில் சிங்கப்பூரர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் சேர்ந்துள்ளது என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
நீ சூனில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மசெக அணிக்கு திரு சண்முகம் தலைமை தாங்கினார். அக்குழுத்தொகுதியில் மசெக ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சிக்கு (ஒசிபுக) எதிராக 73.81 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வென்றது.
சென்ற 2020 பொதுத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் நீ சூனில் மசெக இம்முறை கிட்டத்தட்ட 12 விழுக்காடு அதிக வாக்குகளைப் பெற்றது.
நீ சூன் குழுத்தொகுதி 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து இன்றுவரை அங்கு மசெக இவ்வளவு அதிக விழுக்காடு வாக்குகளைப் பெற்றதில்லை.
தொகுதி உலாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், எதிர்வரும் பொருளியல் சவால்களைக் கையாண்டு மீண்டுவர சிங்கப்பூரை வழிநடத்துவதில் அமைச்சர் என்ற பொறுப்பில் தமக்குப் பங்கிருப்பதாகக் குறிப்பிட்டார்.
“மிகவும் சவாலான காலகட்டத்தை நாம் எதிர்நோக்கவுள்ளோம். பல சிக்கல்கள் இருக்கும் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. பெரிய அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது; முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை, நிறுவனங்கள் விரிவுபடுத்துவதில்லை. இவற்றை நாம் கையாள வேண்டும்,” என்று திரு சண்முகம் விவரித்தார்.