தேசிய சேவைக்கு வலுவான ஆதரவு

1 mins read
ஆனால், சேவையாளரின் திறன் மேம்பாட்டுக்கு மேலும் ஆதரவு தேவை: ஐபிஎஸ் ஆய்வு
c58fe738-9645-4595-9922-c42c54dd10a2
தங்கள் நண்பர்களையும் அன்புக்குரியோரையும் தேசிய சேவை ஆற்ற ஊக்குவிப்போம் என்று ஆய்வில் பங்கெடுத்த 88 விழுக்காட்டினர் கூறினர்.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் தேசிய சேவைக்குப் பொதுமக்களிடத்தில் வலுவான ஆதரவு நீடிக்கிறது.

ஆனால், வேலைக்குத் தேவையான திறன்கள் பெறுவதையும், வேலைவாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வதையும்விட தேசிய சேவையின் முக்கியத்துவம் குறைவாகக் கருதப்படுவதாகக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் (ஐபிஎஸ்) புதிய ஆய்வு காட்டுகிறது.

ஆய்வின் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

சிங்கப்பூருக்கு உடனடியான மிரட்டல் ஏதும் இல்லாவிட்டாலும், கட்டாய தேசிய சேவையை ஆதரிப்பதாக ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 93 விழுக்காட்டினர் கூறினர்.

தேசிய சேவை கட்டாயமில்லாவிட்டாலும்கூட, தங்களது நண்பர்களையும் அன்புக்குரியோரையும் தேசிய சேவை ஆற்ற ஊக்குவிப்போம் என்று 88 விழுக்காட்டினர் கூறினர்.

கல்வியிலும், சிங்கப்பூரின் வேலைச் சூழலிலும், உலகப் பொருளியல் நிலவரத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைத் தொடர்ந்து, தேசிய சேவை பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டங்களைத் தெரிந்துகொள்ள ஆய்வாளர்கள் டாக்டர் சியூ ஹான் எய், திரு ‌ஷேன் பெரேரா, குமாரி பமெலா லீ, குமாரி இசபெல் டான், குமாரி எலிசபெத் லிம் விரும்பினர்.

இதற்குமுன் 2013ல் இதுபோன்ற ஓர் ஆய்வை ஐபிஎஸ் நடத்தியிருக்கிறது. அதன்பின்னர் சிங்கப்பூர் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் மீண்டும் ஆய்வு நடத்தியதாக டாக்டர் சியூ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் மக்களின் கல்வித்தகுதி உயர்ந்திருக்கிறது. ஆண் பிள்ளைகளின் தேசிய சேவையில் பெற்றோர்களும் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர் என்றார் டாக்டர் சியூ.

உலக அரசியல் பூசல்களும் நிச்சயமின்மையும் சிங்கப்பூரின் தற்காப்பு குறித்து பங்கேற்பாளர்களிடையில் வலுவான உணர்வுகளைத் தூண்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்