குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறார் புதிய விளையாட்டு அல்லது இசைக் கருவியைக் கற்றுக்கொள்ளவோ திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவோ இனி ஆண்டுதோறும் 3,000 வெள்ளி பெறுவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கும் (எஸ்டிஎஸ்பிஎம்எஃப்) குவான்டெட்ஜ் அறநிறுவனத்துக்கும் இடையே உருவாகியுள்ள பங்காளித்துவத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிதியுதவி
அந்த நிதியுதவி, எஸ்டிஎஸ்பிஎம்எஃப் திட்டத்தின் மூலம் பலனடையும் 50 சிறாருக்கு குவான்டெட்ஜ் சமூக முன்னேற்ற நிதி (Social Mobility Fund) வாயிலாக 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்படும். அந்த நிதியை சிறார், எஸ்டிஎஸ்பிஎம்எஃப் தளத்தில் வழங்கப்படும் பல்வேறு வாய்ப்புகளுக்கும் பொருள்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆண்டுதோறும் நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் எஸ்டிஎஸ்எம்எஃப் மதிய உணவு விருந்து நிகழ்ச்சியில் இந்தப் பங்காளித்துவத்தைப் பற்றி அறிவிக்கப்பட்டது. தோ பாயோவில் உள்ள எஸ்பிஎச் மீடியா நிறுவனக் கட்டடத்தில் உள்ள அரங்கில் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்றது.
எஸ்டிஎஸ்பிஎம்எஃப் தளம், சமமற்ற வகையில் வாய்ப்புகள் வழங்கப்படக்கூடிய பிரச்சினையைக் கையாள்கிறது என்றும் குறைந்த வருமானக் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகள் சிறப்புச் தேர்ச்சி பெற முடிவெடுப்பதன் தொடர்பிலான உதவியை வழங்குகிறது என்றும் எஸ்டிஎஸ்பிஎம்எஃப் தலைவர் ஜெய்மி ஹோ நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டார்.
“பள்ளி இடைவேளையின்போது செலவிட பணம் இருப்பது முக்கியம்தான். அதேவேளை, பள்ளியையும் தாண்டி கற்றலில் ஈடுபடுவது, தங்கள் ஆசைகளைக் கருத்தில்கொண்டு செயல்படுவது, புதிய அம்சங்களில் ஈடுபட்டுப் பார்ப்பது, மற்ற பிள்ளைகளுக்குக் கிடைக்கும் அதே அனுபவங்களைத் தாங்களும் அனுபவிப்பது போன்றவற்றையும் நமது பிள்ளைகள் விரும்புகின்றனர்,” என்றார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஆசிரியருமான திரு ஹோ.
பலன்பெற்ற மாணவர்கள் கணிசமாக அதிகரிப்பு
எஸ்டிஎஸ்பிஎம்எஃப் 2026ல் கிட்டத்தட்ட 11,000 மாணவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர் தெரிவித்தார். உதவி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2024ல் பதிவானதைக் காட்டிலும் கிட்டத்தட்ட 4,000 அதிகமாகும்.
எஸ்டிஎஸ்பிஎம்எஃப் நிதி, கூடுதலானோர் தகுதிபெற விரிவுபடுத்தப்பட்டதால் பலன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கல்வி அமைச்சின் நிதி ஆதரவுத் திட்டத்துக்கு ஏற்றவாறு எஸ்டிஎஸ்பிஎம்எஃப் நிதியுதவிக்குத் தகுதிபெறும் நிபந்தனைகள் மாற்றப்பட்டது அதற்குக் காரணம்.
