மின்சிகரெட்டுடன் காணப்பட்ட மாணவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்

1 mins read
405cb748-a001-4809-a853-fd5658663958
ஹவ்காங்கில் உள்ள யூயிங் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ் இருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. - படம்: உமியாயோ01/ டிக்டாக்

மின்சிகரெட் கருவியுடன் காணப்பட்ட யூயிங் உயர்நிலைப் பள்ளி மாணவன் பள்ளி ஊழியரிடம் கடுமையாக நடந்துகொண்டதை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.

சுகாதார அறிவியல் ஆணையம் மின்சிகரெட் தொடர்பான அந்தக் குற்றத்தை விசாரிப்பதாக பள்ளி முதல்வர் சொங் ஜேக் ‌ஷெங் தெரிவித்தார்.

சம்பவம் கடந்த மாதம் 31ஆம் தேதி நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளி ஊழியரிடம் அம்மாணவன் மூர்க்கமாக நடந்துகொண்டதை அடுத்து, உதவிக்காகக் காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக திரு சோங் சொன்னார். அதைத் தொடர்ந்து மாணவனிடம் மின்சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை 31ஆம் தேதி சம்பவம் குறித்து பிற்பகல் 3.20 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை மாணவனை கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது.

மாணவன் தற்போது நன்றாக இருப்பதாகவும் பள்ளி அவனது நலனைக் கண்காணிப்பதாகவும் திரு சோங் சொன்னார்.

“எங்கள் ஊழியர்கள், மாணவர்களின் நலன் எங்களுக்கு முக்கியம்,” என்ற திரு சோங், மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் மாணவர்கள்மீது தகுந்த மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுப்பதாகச் சொன்னார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளியில், ஹவ்காங்கில் உள்ள பள்ளி வளாகத்தில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ் இருந்ததைக் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்