சென்ற ஆண்டு NFTE தேசிய இளையர் தொழில்முனைப்பு சவாலில் வாகை சூடிய சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிஸ்கா ரோஷினி, 17, இவ்வாண்டு சிங்கப்பூரை உலக மேடையில் பிரதிநிதிக்க உள்ளார்.
வழக்கநிலைத் தேர்வுகளை முடித்த கையோடு நியூயார்க்கில் நடக்கவுள்ள NFTE உலகத் தொழில்முனைப்பு சவாலில் சிங்கப்பூரைச் சார்ந்த ஒரே போட்டியாளராக அவர் போட்டியிடுகிறார்.
தொழில்முனைப்புச் சிந்தனையை மாணவர்களிடத்தில் வளர்க்கும் ஓராண்டுத் திட்டமான NFTE, ஹேலோஜன் (சிங்கப்பூர்) அறநிறுவனத்தால் பள்ளிகளில் நடத்தப்படுகிறது.
அதற்கு முன்னோடியாக ஹேலோஜன் தன் பள்ளியில் நடத்திய ஒரு வார வர்த்தக முகாமில் பங்கேற்ற ரோஷினி வெற்றிபெற்று, NFTE தேசிய இளையர் தொழில்முனைப்பு சவாலின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
அதில், தீவு முழுவதும் 16 பள்ளிகளிலிருந்து வந்த 51 மாணவர்களுடன் போட்டியிட்டு ரோஷினி வெற்றிகண்டார்.
“நியூயார்க் சென்று எனக்குப் பிடித்ததைச் செய்வது என் சிறுவயதுக் கனவு. அது இப்போது நனவாகவுள்ளது,” என்றார் ரோஷினி.
ஹேலோஜன் (சிங்கப்பூர்) அவருக்கு வழிகாட்டுதல் வழங்க வணிகத் தலைவர்களை அறிமுகப்படுத்தும். அங்கு அவர் அணியவுள்ள உடைகளுக்கு முதற்கொண்டு ஆதரவாளர்களைத் தேடும்.
‘உங்கள் சிறந்த நண்பர், உங்கள் கல்வி உதவியாளர்’
‘செயற்கை நுண்ணறிவு கல்வித் தோழர்’ (AI Study Buddy) எனும் செயலியை உருவாக்குவதே. ரோஷினியின் திட்டம். அதன்மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை உருமாற்ற விரும்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது எனக்கும் என் தோழர்களுக்கும் கல்வி என்பது தனியாக மேற்கொள்ளும் பயணமாக இருக்கிறது. இந்த நடைமுறை தொடர்ந்தால் எதிர்காலத் தலைமுறையினருக்கும் கல்வி கற்கும் உந்துதல் குறைந்துவிடும்,” என்றார் ரோஷினி.
கல்வியில் உதவிபுரியும் கருவிகள் ஏற்கெனவே இருந்தாலும், அவற்றிலுள்ள குறைபாடுகளைச் சுட்டினார் ரோஷினி.
“நான் சேட்ஜிபிடி பயன்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் என் வயது மாணவர்களுக்கு அது ஏற்றதல்ல. அதன் முகப்பு மாணவர்களைக் கவரும் வண்ணம் இல்லை. அவ்வப்போது வினாக்களுக்கு அது அளிக்கும் விடைகளில் பிழைகளும் எழுகின்றன,” என்றார் ரோஷினி.
‘குவிஸ்லட்’ எனும் செயலியையும் சோதித்துப் பார்த்த அவர், செயலியில் ‘தேர்வு’ என்ற சொல்லைப் பார்த்ததும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் நாட்டம் இழந்தார்.
“என் செயலியின் முழக்கவரி, ‘உங்கள் சிறந்த நண்பர், உங்கள் கல்வி உதவியாளர்’. அதை நான் என் நண்பரிடம் காண்பித்தபோது அவர் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியே, என் செயலி மற்ற செயலிகளைவிடத் தனித்து நிற்கிறது எனும் உறுதியை அளித்தது,” என்றார் ரோஷினி.
“என் செயலியில், ‘ஏஐ’ தோழர் எப்படிப் பேசவேண்டும், எதுபற்றி உரையாட வேண்டும் போன்றவற்றை மாணவர்களே தீர்மானிக்கலாம். பிடித்தவாறு செயலி முகப்பை மாணவர்கள் வடிவமைக்கலாம்,” என்றார் ரோஷினி.
ஒலிவடிவிலும் காணொளி வடிவிலும் உதவிக் குறிப்புகள் செயலியில் இருக்கும். மாதம் $5.99 கட்டணத்துக்குச் செயலியை மாணவர்களுக்குக் கொடுக்கலாம் எனத் தீர்மானிக்கிறார் ரோஷினி.
நண்பர்கள், பெற்றோர், பள்ளியும் பலத்த ஆதரவு கொடுப்பதாகவும் பலரும் தம் செயலியின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார் ரோஷினி.
“நான் வெற்றிபெற்ற சமயம் என் தந்தை துள்ளிக் குதித்ததை இன்றும் நினைவுகூர்கிறேன். என் பெற்றோரைப் பெருமைப்படுத்தியுள்ளதில் மனநிறைவடைகிறேன்.
“உன் வயதில் நான் இருந்தபோது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் எங்கேயோ சென்றிருப்பேன் என என் தாயார் கூறுவதுண்டு. நான் இப்போது இவ்வாய்ப்பை வைத்து எங்கேயோ செல்வேன் எனக் கூறினேன்,” என்றார் ரோஷினி சிரித்தபடி.
“அடுத்து நான் முறையாக வணிகம் பயின்று, என் செயலியை உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் வெளியிட விரும்புகிறேன். அதற்கு நான் சரியான குழுவையும் அமைக்கவேண்டும்,” என்றார் ரோஷினி.


