பள்ளிக் கழிவறையில் அடித்துக்கொண்ட மாணவர்கள்

1 mins read
740e9881-44c5-4789-b3b5-442307749f53
சம்பவம் பதிவான காணொளி. - காணொளிப் படம்: ஸ்டோம்ப்

செயின்ட் கேப்ரியல்ஸ் பள்ளிக் கழிவறையில் அடித்துக்கொண்ட மாணவர்கள் இருவர் இப்போது சமாதானமாகி மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதாக அப்பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

அந்த மாணவர்கள் அடித்துக்கொண்டது காணொளியில் பதிவானது. ஓ‌ஷன் என்ற பெயரில் ஸ்டோம்ப் தளத்தைப் பயன்படுத்துபவர் அந்தக் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

இச்சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு செயின்ட் கேப்ரியல்ஸ் பள்ளியில் நிகழ்ந்ததாக ஓ‌ஷன் தெரிவித்திருந்தார். சண்டையில் தான் ஈடுபடவில்லை என்றும் நண்பர் ஒருவர் காணொளியைத் தனக்கு அனுப்பி வைத்ததாகவும் பிறகு அக்காணொளியைத் தான் வேறு கைப்பேசியை அல்லது அது சம்பந்தப்பட்ட கருவியில் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரும் சுமார் 40 விநாடிகளுக்கு ஒருவரை ஒருவர் கைகளால் குத்திக்கொண்டு சண்டையிட்டதை மற்ற மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தது காணொளியில் தெரிந்தது.

இந்தக் காணொளி பற்றித் தாம் அறிவதாக செயின்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளி முதல்வர் ‌ஷோன் லிம், ஸ்டோம்ப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மாணவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் தாக்கியதால் சிறிது நேரத்துக்கு சண்டை மூண்டது என்று திரு லிம் தெரிவித்தார்.

“மாணவர்களின் நடத்தை குறித்து அவர்களின் பெற்றோரைத் தொடர்புகொண்டுவிட்டோம். மாணவர்கள் இருவருக்கும் தகுந்த அறிவுரை வழங்கியிருக்கிறோம். மாணவர்கள் தங்கள் நடத்தையை ஆராய்ந்து தங்களின் செயல்களின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள உதவுவதோடு தவறான நடத்தைக்குத் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்,” என்று திரு லிம் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்