ஆய்வு: டெங்கியால் நீண்டகால உடல்நலப் பிரச்சினை ஏற்படும் சாத்தியம் அதிகம்

2 mins read
9de989e0-08f7-40fb-be89-b6da831241cf
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் ஒப்பிடுகையில், டெங்கி நோயாளிகளுக்கு இதய நோய், ரத்தக் கட்டி போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் 55 விழுக்காடு அதிகம் என்று ஆய்வு தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரைக் காட்டிலும் டெங்கியால் பாதிக்கப்பட்டோருக்கு இதய நோய், ஞாபக சக்தி குறைபாடு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று நாடெங்கும் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் (என்டியு) சேர்ந்த ஆய்வாளர்களின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் ஒப்பிடுகையில், டெங்கி நோயாளிகளுக்கு இதய நோய், ரத்தக் கட்டி போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் 55 விழுக்காடு அதிகம் என்று ஆய்வு தெரிவித்தது.

டெங்கியால் பாதிக்கப்பட்டோருக்கு ஞாபக சக்தி குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் 213 விழுக்காடு அதிகம்.

நடமாட்டக் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் 198 விழுக்காடு அதிகம்.

டெங்கிக் காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கான மருந்து, சிகிச்சை இல்லை.

டெங்கியால் பாதிப்பு ஏற்படும்போது கடுமையான தசை, மூட்டு வலி ஏற்படுவதுடன் கடுமையான காய்ச்சலும் ஏற்படுகிறது.

“பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆய்வை நடத்துவதில் மும்முரம் காட்டினோம்,” என்று என்டியுவின் லீ கோங் சியாங் மருத்துவப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் லிம் ஜு தாவ் தெரிவித்தார்.

இவர் ஆய்வு நடத்திய குழுவுக்குத் தலைமை தாங்கியவர்.

“ஒட்டுமொத்த அடிப்படையில், டெங்கியைத் தடுப்பதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் நடத்திய ஆய்வு வலியுறுத்துகிறது. பொதுச் சுகாதார திட்டமிடுதலுக்கு ஆதரவு வழங்கும் வளங்களில் ஒன்றாக எங்கள் ஆய்வைப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று உதவிப் பேராசிரியர் லிம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்