மிதமிஞ்சிய வயிற்றுக் கொழுப்புடைய நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, உடலுக்குள் ஊடுருவாத மின்காந்தத் துடிப்புகள் குறைப்பதாக உள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய அந்த ஆய்வில், இரண்டாம் வகை நீரிழிவு நோயை முறையாகக் கட்டுக்குள் வைக்காத 40 நோயாளிகள் கலந்துகொண்டனர்.
நீரிழிவு நோயைச் சமாளிக்கச் சாத்தியமுள்ள துணை சிகிச்சைக்குத் தேவைப்படும் நுண்ணறிவை வழங்க அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற நோயாளிகளுக்கு சோதனை முறையில், உடலுக்குள் ஊடுருவாத மின்காந்தத் துடிப்புகள் செலுத்தப்பட்டன.
12 வார சிகிச்சையின் போது, வாரத்திற்கு ஒரு கால் என்ற அடிப்படையில் கால்களில் 10 நிமிடங்கள் வரை காந்தத் துடிப்புகள் செலுத்தப்பட்டன.
குறைந்த அளவிலான துடிப்புகளைக் கொண்ட மின்காந்தப் புலங்களின் பயன்பாடு, உடலுக்குத் தெம்பு கொடுக்கும் ‘மைட்டோகாண்ட்ரியா’வைத் தூண்டுவதன் மூலம் உடற்பயிற்சி செய்ததற்கான ஆற்றலை வழங்குகிறது.
12 வாரச் சோதனைமுறைக்கு முன்னும் பின்னரும் நோயாளிகளிடம் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்தப் புதிய வகை சிகிச்சை மூலம், மிதமிஞ்சிய வயிற்றுக்கொழுப்பு உடைய நோயாளிகள் அதிக பலனடைந்ததைப் பரிசோதனை முடிவுகள் காட்டின.
தொடர்புடைய செய்திகள்
ரத்த சர்க்கரையை ஆரோக்கியமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்போரின் அளவுக்கு அந்த நோயாளிகளின் ரத்த சர்க்கரைக் குறைந்ததை அதில் காணமுடிந்தது.
ஆய்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் ‘கிளினிக்கல் மெடிசின்’ என்னும் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
கடந்து சென்ற இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் வரையிலான ரத்த சர்க்கரையின் சராசரி அளவைக் காட்டும் HbA1c பரிசோதனை அந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்டது.
12 வார காந்தத் துடிப்பு சிகிச்சைக்குப் பின்னர், வயிற்றுப் பருமன் உள்ள ஒன்பது நோயாளிகளின் HbA1c அளவு 7.5லிருந்து 7.1க்குக் குறைந்தது.
சிறந்த முறையில் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்போரின் அளவு 6.5 முதல் 7 வரை ஆகும்.
அதேநேரம், வயிற்றுப் பருமன் அல்லாத 31 நோயாளிகளில் மூவரில் ஒருவரிடம் மட்டுமே HbA1c அளவு குறைந்திருந்ததைக் காணமுடிந்தது.
சிங்கப்பூரில் உடல் பருமன் நிலவரம் அதிகரித்து வரும் வேளையில் ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் நடத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வின்போது, உடல்பருமன் உள்ளோரின் விகிதம் 10.5 விழுக்காட்டில் இருந்து 12.7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது தெரியவந்தது.

