சுபீன் கார்க் மரணம் கப்பல் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கான ‘அறிகுறி’

சுபீன் கார்க் மரணம் கப்பல் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கான ‘அறிகுறி’

2 mins read
48bb28ee-14d1-4382-9fd7-4340c032f8f2
இந்தியப் பாடகர் சுபீன் கார்க் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி மாண்டார். - படம்: அசாம் டைம்ஸ்

பிரபல இந்தியப் பாடகர் சுபீன் கார்க் மூழ்கி மாண்டது, மதுபானம் அல்லது போதைப்பொருளின் தாக்கத்துக்கு ஆளான பயணிகளைச் சமாளிப்பதன் தொடர்பில் கப்பல் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் துறைமுகங்களுக்கான விதிமுறைகளின்படி, கப்பல், அதன் ஊழியர் அல்லது யாருக்காவது ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருந்தால் மதுபானம் அருந்தி அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி போதுமான சுயநினைவில் இல்லாதவர்களை கப்பலுக்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்று டிரையேங்கல் லீகல் எனும் சட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிக்கோ லீ கூறுகிறார்.

கப்பலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டபோது மதுபோதையில் இருந்த கார்க் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று திரு லீ குறிப்பிட்டார். அதேநேரம், மாலுமி அல்லது கப்பலை நடத்துபவர் அறிவுரை வழங்கினாலும் பயணி பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டினார்.

இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது கார்க், லாசரஸ் தீவுக்கு அருகே நீந்திக்கொண்டிருந்தபோது மூழ்கி உயிரிழந்தார். மூழ்கியபோது கார்க் உயிர்க் காப்புக் கவசத்தை அணியாதிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் மூழ்கியதால் உயிரிழந்தார் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனை வெளியிட்ட மரண ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்க்கின் உடலில் ஒவ்வொரு 100 மிலிலிட்டர் அளவு ரத்தத்திலும் 333 மிலிகிராம் அளவு மதுபானம் கலந்திருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

ரத்தத்தில் மதுபான அளவு

ஒப்புநோக்க, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது ஒவ்வொரு 100 மில்லிலிட்டர் ரத்தத்திலும் 80 மில்லிகிராம் அளவுக்கு மேல் மதுபானம் கலந்திருக்கக்கூடாது.

கப்பல் பயணத்தின்போது அதன் மாலுமி, பயணியின் நலன்கருதி நடந்துகொண்டாரா என்ற கேள்வி எழுவதாக கிளிஃரப்ட் லா எல்எல்பி சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வனேசா சந்து குறிப்பிட்டார். பயணிகள் நீச்சல் உள்ளிட்ட நீர் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்களை வழங்குவது, பாதுகாப்பு தொடர்பான அறிவுரை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அதில் அடங்கும்.

அதேவேளை, பயணி போதையில் இருந்தால் உடனே மாலுமி அதற்குப் பொறுப்பாவார் எனச் சொல்ல முடியாது என்றும் திருவாட்டி சந்து சொன்னார்.

குறிப்புச் சொற்கள்