கருவுறுதல் சிகிச்சை பெறும் ஊழியர்களுக்குப் பணியிடங்களை மேலும் ஆதரவளிப்பதாக மாற்றுவது, சிங்கப்பூரர்கள் திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவற்றைச் சமாளிக்க உதவும் வகையில் மக்கள் செயல் கட்சி (மசெக) மகளிர் பிரிவின் முன்மொழிவுகளின் முக்கியக் கவனமாக இருக்கும்.
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தலைமையிலான ‘திருமணம், பிள்ளைப்பேறு குறித்த மறுசீரமைப்பு பணிக்குழு’விடம், மசெக மகளிர் பிரிவு தங்களுக்குக் கிடைத்த கருத்துகளைத் தொகுத்து 2027 ஜனவரியில் பரிந்துரைகளாகச் சமர்ப்பிக்கும்.
மசெக மகளிர் பிரிவின் தலைவர் சிம் ஆன், வியாழக்கிழமை (நவம்பர் 12), கருவுறுதல் ஆதரவு குறித்த பரிந்துரைகளைத் தங்கள் குழு உறுதிப்படுத்தி முன்வைக்க விரும்புவதாகவும், சிகிச்சை பெறுபவர்களுக்கு முதலாளிகள் எவ்வாறு பணியிடங்களை மேலும் ஆதரவளிக்கக்கூடியதாக உருவாக்கலாம் என்பதும் இதில் அடங்கும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, ஊழியர்கள் தங்கள் வேலையையும் குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாகச் சமநிலைப்படுத்த உதவும் வகையில், என்டியுசி பல்வேறு முன்னெடுப்புகளைச் செயல்படுத்தி வருகிறது. இதில், நீக்குப்போக்கு கொண்ட வேலை வாய்ப்புகளுக்கென பிரத்தியேகப் பகுதியைக் கொண்ட, மேம்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு இணையத்தளம் ஒன்றும் அடங்கும்.
இவற்றில் தொலைதூர வேலை, நீக்குப்போக்கான பணிநேரம், குறைக்கப்பட்ட அல்லது நீக்குப்போக்கான பணிச்சுமை கொண்ட வேலைகள் அடங்கும். சுமார் 37 நிறுவனங்கள் நவம்பர் 13ஆம் தேதியன்று இந்தத் தளத்தைப் பயன்படுத்திச் சோதிக்கவுள்ளனர்.
2026ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் பிரிவு கலந்துரையாடல் அமர்வில் பேசிய திருவாட்டி சிம் ஆன், கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகளுக்கு, பணியிடங்களிலிருந்து கூடுதல் ஆதரவு கிடைப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டார்.
“கருவுறுதல் சிகிச்சை பெற்று வரும் சிங்கப்பூரர்கள், குடும்பத்தைத் தொடங்கும் முயற்சியில் ஏற்கெனவே உறுதியாக உள்ளனர். அவர்களுக்கு நாம் கூடுதல் ஆதரவை வழங்க முடிந்தால், குறிப்பாக, கருவுறுதலுக்கு உகந்த பணியிடக் கலாசாரத்தை உருவாக்க முதலாளிகளையும் இதில் பங்கேற்கச் செய்ய முடிந்தால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்,” என்றார்.
என்டியுசி மகளிர், குடும்பப் பிரிவு, கறுவுறுதல் ஆதரவு எஸ்ஜி ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த அமர்வு, இத்தகைய மருத்துவ சிகிச்சைகளைப் பெறும் ஊழியர்களுக்கு பணியிடங்கள் எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து விவாதிக்க முதலாளிகளையும் ஊழியர்களையும் ஒன்றிணைத்தது.
இதுவரை நடத்தப்பட்ட ஒன்பது அமர்வுகளில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார். இந்த அமர்வுகள் ஜோடிகள் சந்தித்தல், திருமணம், பிள்ளைப்பேறு போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தின.
