பயனீட்டாளர்கள் அதிகபட்சம் 10 போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகளை மட்டுமே பதிவுசெய்ய முடியும்

பிப்ரவரி 28 நடப்புக்கு வரும் புதிய மாற்றம்

பயனீட்டாளர்கள் அதிகபட்சம் 10 போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகளை மட்டுமே பதிவுசெய்ய முடியும்

2 mins read
1cde972e-af78-4664-9a95-3dcd1d51a76a
பொதுமக்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அண்மை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதியிலிருந்து பயனீட்டாளர்கள், அதிகபட்சம் 10 போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகளை மட்டுமே பதிவுசெய்ய அனுமதிக்கப்படுவர்.

மோசடிகளுக்கு எதிரான முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகளுக்கு அவற்றைப் பயன்படுத்திய பிறகு கட்டணம் செலுத்தினால் போதும்.

பொதுமக்களை மோசடிகளிலிருந்து பாதுகாப்பது அண்மை நடவடிக்கையின் நோக்கம் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் காவல்துறையும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

சிம் அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க அவற்றின் பதிவைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் ஆணையமும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருவதாக அறிக்கை குறிப்பிட்டது.

தவறான செயல்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியம் புதிய நடவடிக்கையின் மூலம் குறையும் என்று அது நம்பிக்கை தெரிவித்தது.

குடும்ப உறுப்பினர்களுக்காக அல்லது வர்த்தகக் காரணங்களுக்காகச் சிலருக்குக் கூடுதல் சிம் அட்டைகள் தேவைப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரலில், முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பதிவுசெய்யும் சிம் அட்டைகளின் எண்ணிக்கை பத்திலிருந்து மூன்றுக்குக் குறைக்கப்பட்டது. அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு, வாடிக்கையாளர்கள் எத்தனை போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகளை வேண்டுமானாலும் பதிவுசெய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் 2024 ஏப்ரலில், ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் அதிகபட்சம் அத்தகைய 10 சிம் அட்டைகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

அத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதும், பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து மோசடிக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகளை வாங்குவது தெரியவந்தது.

சிம் அட்டைகளைப் பெற்ற பின்பு, அவர்கள், குற்றக்கும்பல்களிடம் அவற்றைக் கொடுத்துவிடுவர். குற்றக்கும்பல்களைச் சேர்ந்தோர், சிம் அட்டைகளைச் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துவர்.

அதனால் போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யப் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து போஸ்ட்பெய்ட் சிம் அட்டைகளை வாங்குவோருக்குப் புதிய நடைமுறை பொருந்தும்.

பிப்ரவரி 28க்கு முன்னர், பத்துக்கும் மேற்பட்ட சிம் அட்டைகளை வைத்திருப்போர் பாதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அவற்றைத் திருப்பிக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் மேற்கொண்டு புதிய சிம் அட்டைகளைப் பெறுவதற்கு அவர்கள் பதியமுடியாது.

குறிப்புச் சொற்கள்