தனியார் வீடுகளிலும் மூத்தோர் வசதிகளுக்குச் சலுகை

தனியார் வீடுகளிலும் மூத்தோர் வசதிகளுக்குச் சலுகை

2 mins read
bc8879f8-d905-49f2-8d1c-986254f970e2
தனியார் வீடுகளில் பிடித்துக்கொண்டு நடப்பதற்கான கைப்பிடிகள் போன்றவற்றைச் செய்துகொள்ள சலுகை வழங்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் விடுகளில் மூத்தோர் நடமாடவும் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவுவதற்கான வசதிகளைச் செய்து தருவதற்குச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 80,000க்கும் அதிகமான தனியார் வீடுகளில் வசிப்போருக்கு இந்தச் சலுகைகள் கட்டங்கட்டமாக வழங்கப்படும். முதற்கட்டமாக 80 வயது அல்லது அதையும் தாண்டியோருக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சலுகைகள் வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) தெரிவித்தார்.

குளிப்பது, கழிவு அகற்றுவது, உணவு உண்பது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றிலாவது சிரமத்தை எதிர்நோக்கும், 60லிருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்களும் முதற்கட்ட நடவடிக்கையில் உதவி பெற்றுக்கொள்ளலாம்.

சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் முன்னதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிப்போருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்டவர்கள் எந்த வகை வீட்டில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மூத்தோருக்கான வசதிகளைச் செய்துகொள்ள அரசாங்கச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தகுதிபெறும் தனியார் விடுகளில் வசிபோரில் குறைந்தது ஒருவராவது சிங்கப்பூரராக இருக்கவேண்டும். தகுதிபெறும் வீடுகள் ஒவ்வொன்றிலும் ஏழு வகையாக மூத்தோருக்கு உதவும் அம்சங்களை 75 விழுக்காட்டு விலைக் கழிவுடன் செய்துகொள்ள 1,200 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

உதாரணமாக, தரை வழுக்காமல் பார்த்துக்கொள்ளும் அம்சத்தைச் செய்துகொள்ளவும் கையால் பிடித்துக்கொண்டு நடப்பதற்கு கைப்பிடிகளையும் பொருத்துவதற்கும் சுமார் 800 வெள்ளிச் செலவாகும். ஆனால், சலுகை வழங்கப்படுவதால் கையிலிருந்து அவற்றுக்கு 200 வெள்ளிச் செலுத்தினால் போதும்.

“எஞ்சிய 600 வெள்ளியை வைத்துக்கொண்டு தேவைப்பட்டால் வருங்காலத்தில் அதனைப் பயன்படுத்தி மேலும் சில வசதிகளைச் செய்துகொள்ளலாம்,” என்று திரு சீ கூறினார்.

பீ‌ஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு சீ, அத்தொகுதியின்கீழ் வரும் பிராடல் வியூ கொண்டோமினிய வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுடனான சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது பேசினார்.

சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வீவக வீடுகளில் வசிப்போருக்குக் கூடுதல் விழுக்காடு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எக்சிகியூட்டிவ் வீடுகளில் வசிப்போருக்கு 87.5 விழுக்காடு சலுகை வழங்கப்படுகிறது. விகிதம் கட்டங்கட்டமாக அதிகரிக்கப்பட்டு வீவக மூவறை வீடுகளில் வசிப்போருக்கு 95 விழுக்காடாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்