டிசம்பர் 1 முதல் மரபியல் மார்பக, கருப்பைப் புற்றுநோய்ப் பரிசோதனைக்குச் சலுகைக் கட்டணம்

டிசம்பர் 1 முதல் மரபியல் மார்பக, கருப்பைப் புற்றுநோய்ப் பரிசோதனைக்குச் சலுகைக் கட்டணம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Nov 2026 - 6:27 pm

2 mins read

மரபியல் மார்பக, கருப்பைப் புற்றுநோய்களுக்கான (எச்பிஓசி) சலுகைக் கட்டணத்திலான மரபணுப் பரிசோதனை, வரும் டிசம்பர் 1 முதல் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையம், தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலையம், டான் டோக் செங் மருத்துவமனை ஆகியவற்றின் சிறப்பு வெளிநோயாளி சிகிச்சை மருந்தகங்களில் வழங்கப்படும்.

‘எச்பிஓசி’ மரபணுப் பரிசோதனைக்கும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தகுந்த சிகிச்சைகளுக்கும் டிசம்பர் மாதம்முதல் பொதுச் சுகாதார நிதியுதவித் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தகுதிபெறும் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வருமானத்தைப் பொறுத்து, பரிசோதனைக் கட்டணத்தில் 70 விழுக்காடு வரை சலுகை பெறலாம் என்று வியாழக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட செய்தி அறிக்கையில் அமைச்சு தெரிவித்தது. முன்னோடித் தலைமுறையினருக்கும் மெர்டேக்கா தலைமுறையினருக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்பதையும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.

சலுகைக்குமுன் கிட்டத்தட்ட $1,000 செலவாகும் அந்தப் பரிசோதனைக்கான எஞ்சிய தொகையை, மெடிசேவ் கணக்கில் போதுமான நிதி வைத்திருக்கும் நோயாளிகள் அதனைப் பயன்படுத்தி முழுமையாக ஈடுசெய்துகொள்ளலாம்.

பாலினப் பாகுபாடின்றி, தகுதிபெறும் எவரும் செய்துகொள்ளக்கூடிய அந்தப் பரிசோதனை மூன்று பிரிவினருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

‘எச்பிஓசி’ ஏற்படக்கூடிய அறிகுறிகளைக் கொண்ட மார்பக மற்றும்/அல்லது கருப்பைப் புற்றுநோயாளிகள், ‘எச்பிஓசி’ தொடர்புடைய மரபணுவைக் கொண்ட தனிநபர்களின் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தில் வலுவான ‘எச்பிஓசி’ பின்னணி இருந்தும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் பரிசோதனை செய்துகொள்ள முடியாத நிலையில் உள்ள தனிநபர்கள் ஆகியோரே அவர்கள்.

கடந்த மார்ச் மாதம் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் முதன்முதலில் அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அது ‘எச்பிஓசி’ தொடர்புடைய மரபணு மாற்றங்கள் கொண்டவர்களை அடையாளம் கண்டு, முன்கூட்டியே தகுந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் மார்பக, கருப்பைப் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்