செந்தோசா கோவ் பகுதியிலுள்ள ‘ஒன்°15 மரினா கிளப்’பில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) காலை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.
படகு தீப்பற்றி எரிந்தது குறித்து காலை 8.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தெரிவித்தது.
அதனையடுத்து, ஏழு நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்தைச் சென்றடைந்ததாக அது குறிப்பிட்டது.
குடிமைத் தற்காப்புப் படையின் விரைவுச் செயல்பாட்டு கடல்துறைப் படகும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது.
தீ கட்டுக்குள் வந்துவிட்டபோதும் இருப்பினும் படகை முழுமையாக நனைக்க தீயணைப்பு வீரர்கள் அதன்மீது தொடர்ந்து நீரைப் பீய்ச்சியடித்து வருவதாகக் கூறப்பட்டது.
“தீ விபத்தால் இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லை,” என்று நண்பகல் 12.05 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.
காலை 8 மணியளவில் அப்படகிலிருந்து புகை வெளியானது கண்டுபிடிக்கப்பட்டதாக ‘ஒன்°15 மரினா கிளப்’ நிர்வாகம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
அங்கிருந்த அவசரகாலச் செயல்பாட்டுக் குழு உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பேச்சாளர் கூறினார்.
“இப்போதைக்கு எவருக்கும் காயமில்லை. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
‘ஈகிள் விங்ஸ் III’ என அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் படகு 33.8 மீட்டர் (111 அடி) நீளம் கொண்டது என்று சிஎன்ஏ செய்தி குறிப்பிட்டுள்ளது.
அந்தச் சொகுசுப் படகில் கிட்டத்தட்ட 50 விருந்தினர்கள் தங்க முடியும் என்றும், அதில் தனித்துவ உணவருந்தும் பகுதி, ‘ஜக்கூசி’ குளியல் தொட்டி போன்ற வசதிகள் உள்ளன என்றும் தெரியவந்துள்ளது. அது முக்கியமாகத் தனியார் மற்றும் பெருநிறுவன நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தீப்பற்றிய படகின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றப் படகுகள் எதுவும் சேதமடையவில்லை.

