தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளவுபட்ட உலகில் ஆசியாவின் பயணத்தை ஆராய்ந்த மாநாடு

3 mins read
4408a86f-b174-4779-a1c0-f87eabdd3a61
மைனர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான வில்லியம் ஹெய்னெக்கே (இடது) பங்கேற்ற கலந்துரையாடலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூத்த கட்டுரையாளர் ரவி வெல்லூர் வழிநடத்தினார். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

எஸ்பிஎச் மீடியா நான்காவது முறையாக ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2025’ புதன், வியாழக்கிழமைகளில் (அக்டோபர் 8, 9) நடைபெற்றது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆகிய ஊடகங்கள் சேர்ந்து ‘த ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடத்திய இந்த உச்சநிலை மாநாட்டிற்கு ஓசிபிசி வங்கி பொறுப்பாதரவு அளித்தது.

இவ்வாண்டு ‘பிளவுபட்ட உலகை வழிநடத்துதல்’ (Navigating a Fractured World) எனும் கருப்பொருளை மாநாடு ஆராய்ந்தது. புவிசார் அரசியல் பதற்றங்கள், தொழில்நுட்பப் பிளவு, பொருளியல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் மத்தியில், உலகை வழிநடத்துவதில் ஆசியா எவ்வாறு ஒரு மையப் பங்கை வகிக்க முடியும் என்பது குறித்த உரையாடல்களை இந்த நிகழ்ச்சி ஊக்குவித்தது.

‘பிளவுபட்ட உலகம்’ என்ற சொற்றொடர், உருவெடுத்துவரும் புதிய உலக ஒழுங்கின் தொடக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துவதாகத் தமது வரவேற்புரையில் குறிப்பிட்ட எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், அரை நூற்றாண்டுக்கும் மேலாக நமது வட்டாரத்தில் திறம்படச் செயல்பட்டுவரும் வழிகாட்டி நெறிமுறைகள் இனி நடைமுறைக்குப் பொருந்தக்கூடியவையாகத் தோன்றவில்லை எனக் குறிப்பிட்டார்.

உச்சநிலை மாநாட்டில் வரவேற்புரையாற்றிய எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட்.
உச்சநிலை மாநாட்டில் வரவேற்புரையாற்றிய எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட். - படம்: சாவ்பாவ்

“நாம் மனம் தளர்ந்து, ‘என்ன நடந்திருக்கும்?’ என்று புலம்பலாம். அல்லது நம் எதிர்காலத்தை நம் கைகளில் எடுத்துக்கொள்ளலாம். எந்த நெருக்கடியிலும், சிலர் தோல்வியடைவார்கள், சிலர் வெற்றி பெறுவார்கள்.

“வழிகாட்டி முறைகள் இல்லாத நிலையில், புதிய ஒன்றை உருவாக்கவும், புதிய பாதையை வகுக்கவும் ஓர் அரிய வாய்ப்பு ஏற்படுகிறது,” என்று அவர் சொன்னார்.

இந்த உச்சநிலை மாநாடு, பங்கேற்கும் தலைவர்களுக்கு ஒரு தளத்தை வழங்கவும், ஒரு புதிய வழிகாட்டி முறைகளுக்குத் தேவையான உத்திகளைப் பற்றியும் பங்காளித்துவங்களைப் பற்றியும் உரையாடல்களைத் தூண்டவும், இந்தப் பிளவுபட்ட புதிய உலகில் வாழ்வதற்கு மட்டுமல்லாது, செழித்து வளரவும் உதவும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

பொது, தனியார்துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், மூத்த பேராளர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 பேர் இந்த இருநாள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரையும் வெளிநாடுகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இவ்வாண்டின் மாநாட்டில் கலந்துகொண்டு, ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்த தங்களின் நுண்ணறிவைப் பகிர்ந்துகொண்டனர்.

மைனர் இன்டர்நேஷனல் என்ற விருந்தோம்பல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான வில்லியம் ஹெய்னெக்கேயுடனான கலந்துரையாடலுடன் முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. இந்தக் கலந்துரையாடலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூத்த கட்டுரையாளர் ரவி வெல்லூர் வழிநடத்தினார்.

ஆசியாவில் நன்கு அறியப்பட்ட தொழில்முனைவர்களில் ஒருவரான திரு ஹெய்னெக் தமது ஆரம்பகாலப் பயணம், அனைத்துலக நிறுவனத்தை உருவாக்கிய அனுபவம், தொழில் பயணத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை எதிர்கொண்ட தருணங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

மைனர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான வில்லியம் ஹெய்னெக்கே.
மைனர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான வில்லியம் ஹெய்னெக்கே. - படம்: சாவ்பாவ்

2018ல் மைனர் இன்டர்நேஷனல் நிறுவனம் என்எச் ஹோட்டல் குழுமத்தைக் கையகப்படுத்தியதை தமது மிகப் பெரிய ஒப்பந்தமாகக் கருதிய அவர், அது நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களை மூன்று மடங்காக உயர்த்திய பல பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஒப்பந்தமாகும் என்று கூறினார்.

அந்தக் கையகப்படுத்தல் வெறும் ஐரோப்பிய விரிவாக்கத்துக்காக மட்டுமன்று, என்எச் ஹோட்டல் குழுமத்தின் 800 அனுபவமிக்க ஊழியர்களுக்காகவும் என்று அவர் விளக்கினார்.

“எல்லாவற்றிலும் மனிதர்கள்தான் மையம் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் நிலைத்திருக்கிறது. எந்த முயற்சியிலும் வெற்றியை முடிவுசெய்வது நம்மிடமுள்ள சரியான மனிதர்கள்தான்,” என்றார் திரு ஹெய்னெக்கே.

மாறிவரும் புவிசார் அரசியல், பொருளியல் சூழல் குறித்து கேட்கப்பட்டபோது, உலகளாவிய வணிகத்திலும் அரசியலிலும் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களைப் பற்றி அவர் பேசினார்.

“அமெரிக்கா பல ஆண்டுகளைச் செலவிட்டு உருவாக்கிய உறவுகளை மிகக் குறுகிய காலத்திலேயே சீர்குலைத்துவிட்டது. தெளிந்த சிந்தனைகள் மீண்டும் மேலோங்கி, சுதந்திரமான வணிகத்துறையும் திறந்த ஈடுபாட்டும் கொண்ட காலத்துக்கு நாம் மீண்டும் திரும்பும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு குறித்தும் பேசிய திரு ஹெய்னெக்கே, விருந்தோம்பல் துறையின் மனிதத்தன்மையை அது மாற்றாது என்றும் மாறாக அதைக் கூடுதல் அர்த்தமுள்ளதாக ஆக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்