மண்டாய் வனவிலங்குக் காப்பகம் கடந்த மார்ச் 1ஆம் தேதி சுண்டா பேங்கொலின் குட்டியை வரவேற்றுள்ளது.
மண்டாயில் ஏற்கெனவே மூன்று சுண்டா பேங்கொலின்கள் உள்ளன.
பேங்கொலின் குட்டியின் தந்தை ‘ராடின்’, தாய் ‘கம்பி’, வரும் மாதங்களில் குட்டிப் போடவிருக்கும் மற்றொரு பெண் பேங்கொலின் ஆகியவையே அவை.
வியாழக்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில், பத்தாண்டுகளில் மண்டாயில் பிறந்துள்ள முதல் பேங்கொலின் குட்டி அது என்று வனவிலங்குக் காப்பகம் தெரிவித்தது.
சுண்டா பேங்கொலின் அனைத்துலக இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால், மிக அருகிவரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதியில் அவை முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மண்டாய் வனவிலங்குக் காப்பகம் பகிர்ந்துகொண்ட காணொளிகளில், அந்தக் குட்டி, தாயின் வாலில் சவாரி செய்வதைக் காண முடிந்தது. அது, புதிதாகப் பிறந்த பேங்கொலின் குட்டிகளுக்கே உரிய ஓர் இயல்பான நடத்தை.
பேங்கொலின்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைக்க, விலங்குக் காப்பாளர்கள் கண்காணிப்புக் கருவிகள் மூலம் அவற்றைக் கண்காணித்துவருவதாக மண்டாய் வனவிலங்குக் காப்பகம் கூறியது.
அந்த பேங்கொலின் குட்டி வரும் ஏப்ரல் மாதம் பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதுவரை, ‘நைட் சஃபாரியின்’ பேங்கொலின் பாதையில் (Pangolin Trail) வைக்கப்பட்டுள்ள நேரலை புகைப்படக் கருவி மூலம் பார்வையாளர்கள் அந்தக் குட்டியைக் கண்டு ரசிக்கலாம்.

