சுந்தரேஷ் மேனனுக்கு ‘ஆர்டர் ஆஃப் தெமாசெக்’ உச்சத் தகுதி விருது

சுந்தரேஷ் மேனனுக்கு ‘ஆர்டர் ஆஃப் தெமாசெக்’ உச்சத் தகுதி விருது

3 mins read
எஸ். சந்திரதாசுக்கு மெச்சத்தக்க சேவை பதக்கம்
b319a285-a461-4dd0-a0bf-1ca2722c66d1
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். - படம்: சிங்கப்பூர் நீதித் துறை
multi-img1 of 3
Google News Preferred Icon

சிங்கப்பூர் தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அரசாங்கம் இவ்வாண்டுக்கான தேசிய தின விருதுகளைப் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சிறந்த முறையில் தங்கள் பங்கை வெளிப்படுத்திய மொத்தம் 7,491 பேர் தேசிய தின விருதுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் 6,625 பேர் பொதுத் துறையையும் 866 பேர் ராணுவத்தையும் பிரதிநிதிக்கிறார்கள்.

விருது பெறுவோர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் 64 வயது தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தெமாசெக் (உச்சத் தகுதி)’ அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உச்ச விருது

இந்த விருதை திரு மேனனுடன் மற்றொருவரும் பகிர்ந்துகொள்கிறார். அவர்தான் அதிபர் ஆலோசனை மன்றத்தின் முன்னாள் தலைவரான 79 வயது திரு எடி டியோ.

தமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் விருது பற்றிக் கருத்துரைத்த திரு மேனன், “ஒரு தேசமாகத் தனது வரலாறு நெடுகிலும், சட்டத்தின் ஆட்சி மீதான தனது உறுதிப்பாட்டில் சிங்கப்பூர் அசைக்கமுடியாமல் இருந்து வந்துள்ளது. நமது சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்பை வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கும், இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதற்கும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

“நமது நீதித்துறையை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு ஒப்படைக்கப்பட்டது. அது எனது வாழ்க்கைத்தொழிலின் மிகப்பெரிய பாக்கியமும் கௌரவமும் ஆகும். ஒரு வழக்கறிஞராக, இதைவிட உயர்ந்த ஓர் அழைப்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. மேலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, அதை அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நனவாக்கும் கழகங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் தங்களை அர்ப்பணித்த நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், நீதிமன்ற நிர்வாகிகள், பணியாளர்கள், சட்டத் தொழில் வல்லுநர்கள் என எண்ணற்ற மக்களால் நான் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு எனது பதவிக்காலம் முழுவதும் எனக்கு உத்வேகம் அளித்துள்ளது.

“எனவே, இந்த விருது, நீதித்துறையை வலுப்படுத்தவும், நீதி நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அயராது உழைத்த அனைவரையும் கௌரவிக்கிறது. சிங்கப்பூரின் சட்ட மற்றும் நீதித்துறையின் இருநூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும் ஆண்டில் இது வழங்கப்படுவது மிகவும் அர்த்தமுள்ளதாகும்,” என்று திரு மேனன் மேலும் தெரிவித்தார்.

அடுத்த உயரிய நிலை விருதான மேன்மைதங்கிய சேவை (The Distinguished Service Order) விருதை ஐவர் பெறுகின்றனர். நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஆலன் சான், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு எட்மண்ட் செங், மட்பாண்டக் கலைஞர் டாக்டர் இஸ்கந்தர் ஜலில், சமய மறுவாழ்வுக் குழுவின் இணைத் தலைவர் உஸ்தாஸ் முகம்மது ஹஸ்பி ஹசான், செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் திரு பாப் டான் ஆகியோரே அவர்கள்.

மெச்சத்தக்க சேவை பதக்கம்

அதற்கு அடுத்த நிலை விருதான மெச்சத்தக்க சேவை பதக்கத்தைப் (The Meritorious Service Order) பெறும் அறுவரில் ஒருவர், இலங்கைக்கான முன்னாள் சிங்கப்பூர்த் தூதரான 86 வயது எஸ். சந்திரதாஸ்.

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பெருநிறுவனத் தலைவர், முன்னாள் அரசியல்வாதியும் அரசதந்திரியுமான திரு சந்திரதாஸ், 1980 முதல் 1996ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். என்டியுசி ஃபேர்பிரைஸ், வர்த்தக வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் உட்பட முக்கியத் தேசிய அமைப்புகளில் முக்கியத் தலைமைப் பதவிகளையும் வகித்தவர்.

திரு சந்திரதாஸ், 2005 முதல் 2017வரை தமிழ் முரசின் தலைவராகப் பணியாற்றினார். அவரது 12 ஆண்டு காலப் பதவிக்காலம், சிங்கப்பூரின் வட்டார மொழி அச்சு ஊடகங்களுக்கு உத்திசார் வளர்ச்சி, ஒருங்கிணைப்பின் ஓர் உருமாற்றக் காலகட்டமாக அமைந்தது. அவரது பதவிகாலத்தின்போது 2008ல் தமிழ் முரசின் ஆங்கில வார இதழான தப்லா! அறிமுகம் கண்டது.

குறிப்புச் சொற்கள்
தேசிய தினம் 2026தலைமை நீதிபதிவிருதுநீதிபதி